ஒன்றே தெய்வம்!
- சசிகலா விஸ்வநாதன்
சாலை ஓரத்தில்
காலில்லா சப்பாணி
சிறுவன் ஒருவன்.
கரித்துண்டு ஒன்று
இடக்கையிலும்,
வெண் சுன்னக்கட்டி வலக்கையிலும்,
ஏந்தி கண்மூடி அமர்ந்து...
இருந்தான்!
ஒருகணம், மட்டிலும்
வித விதமான வண்ண சுண்ணக் கட்டிகள்
துரு ஏறின ஓவல்டின் டப்பாக்குள்ளிருந்து
அவனை
எட்டிப்பார்க்க;
மளமள வென தார் சாலையில் ஓவியம்
ஒன்று உருவானது தெரிந்தது.
முப்பதே நிமிடங்கள்:
செம்மை வண்ணம் காட்டி;
சிரித்திட்டான் சரவணன்;
'ஓ'ங்கார வடிவமைப்பிலே!
சரணடைந்த நொடியில்
என் மனம் திறந்து;
நான் உன்னிலும்
என்னிலும் நீ
என்று
உள் புகுந்த விந்தை!
சப்பாணி சிறுவன்
கைவண்ணத்தில்;
மறுநாள்
தேவாலய வாசலில்
ஏசுபிரான்;
பிறிதொரு நாள்
க்ஷிரடி பாபா;
ஒரு நாள் குரு நானக்;
மற்றும் ஒரு நாள் கன்னி மேரி; கையில் குழந்தை ஏசுவுடன்
எனக்கு பேச்சியம்மனை நினைவு படுத்த;
அனைவரும்
முருக சரவணன்
முக சாடை;
கூர்ந்து நோக்கினேன்!
ஆடையணிகளும் அலங்காரங்களும் மட்டிலும்...
அவை மட்டும்... அவை மட்டுமே
பேதம் காட்டும்
ஒப்பின்மை!
ஒன்றே தெய்வம்
என் உறுதியாய் நிற்கிறேன்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)