Short Story: ஒரு சொல்

Su.tha Arivalagan
Aug 25, 2026,04:21 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


விசாலம் காலை நடைப்பயிற்சிக்காக கணவர்  ஜகநாதனோடு,கடற்கரைக்கு வந்திருந்தாள். இனம் தெரியாத அமைதி இருவரிடமும்." ஏங்க! ஒண்ணும் பேசாம வரீங்க" என்று கேட்கவும்,ஜகன் "என்ன பேசணும்; நீ வேணும்னா பேசு. நான் கேட்கிறேன் தினமும் லேட்டாகத்தான் கிளம்புற. ஆஃபிஸுக்கு, டெய்லி உன்னால்தான் லேட் ஆகிறது" என்றான்.


"வெடுக்கென்று. விசாலத்திற்கு " ஏண்டா வாயை கொடுத்து வாங்கிக்  கட்டிண்டோம்" என்று இருக்க; மறுபடியும் அமைதி.


சிறிது நேரம் அப்படியே போக; "மன்னிச்சுடுங்க. நாளையிலிருந்து ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி‌விடுகிறேன்." என்று சொல்ல, சற்றே அவனது மன இறுக்கம் தளர்ந்தது. 


"இதோ  பாருங்க! சுமதியும் , சாமிநாதனும் வராங்க" என்றாள் விசாலம் .ஜகனின், தங்கையையும் அவள் கணவனையும் கண்ட உற்சாகத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுடன் பேசினான். ஞாயிறு அன்று வீட்டிற்கு வருவதாகச் சொல்லி விடை பெற்றனர், சுமதியும் சாமிநாதனும்.


ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்" வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு போகலாம்” என்றான். " ஏன்? வீட்டில்  இடியாப்பம்- குருமா தயாராய்  இருக்குங்க" என்றாள். அதை இரவு சாப்பிடலாம்.  இப்போ, வா; இன்று  நமக்கு , கற்பகாம்பாள் மெஸ்ஸில்தான் காலை உணவு, என்று பிடிவாதமாகச்  சொல்ல இருவரும்; ஸ்கூட்டரில் பறந்தார்கள். 


காலை வேளை கூட்டம் வர ஆரம்பிக்கவில்லை. ஆனியன் ரவா தோசை , கேசரி, டபுள் ஸ்ட்ராங்க் காபியுடன் இனிதே முடிந்தது காலை உணவு." இனி மாதம் ஒரு முறையாவது இப்படி வெளியே வந்து சாப்பிடலாம்; என்ன!" என்று உல்லாசமாக கண் சிமிட்டினான் , ஜகன். விசாலமும் தலையை ஆட்டி சம்மதம் சொன்னாள்.




அவன் நல்ல  மனநிலையில் இருக்கிறானா; என்று ஒரு முறைக்கு மூன்று முறை   முகத்தைப் பார்த்துக் கொண்டு" ஏங்க! ஒன்று சொல்கிறேன் சற்று காது கொடுத்து கேட்கறீங்களா"  என்றாள்‌. "என்ன" என்று புருவத்தை உயர்த்தினான்.


"ஒண்ணுமில்லைங்க!   உங்களுக்கு, சின்னச் சின்ன  விஷயத்திற்கு எல்லாம் மிகவும் கோபம் வருகிறது. உங்கள் உடல்நலம் தான் கெடும் பி .பி எகிறி விடுகிறது‌. தலைவலி என்று நாள் முழுக்கப் படுத்து விடுகிறீர்கள். மகிழ்வின் உச்சம்; அல்லது கோபத்தின் உச்சம். கொஞ்சம் மனதை இலகுவாக வைத்துக் கொள்ளலாகாதா? மிதமாக இருக்கப் பயிலுங்கள். யோகா  ஏதும் பயின்று பாருங்கள்" என்று  எப்படியோ சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்‌.


ஜகனுடைய கூர்மையான ஒரு பார்வை அவளை துளைத்தது. அவன் ஒரு சொல்..... ஒரே ஒரு சொல்தான் சொன்னான்" உன் வேலையை மட்டும் பார்" என்றும் சைகையாலும் "வாயை மூடு" என்று சமிக்ஞை செய்ய, விசாலத்திற்கு, மீண்டும், " ஏன் இவரிடம் வாயைத் கொடுத்து, வசவு வாங்கினேன்" என்று இருந்தது.


அதுவே அவளுக்கும் அவனுக்குமான முப்பது வருடம் பழக்கமும், வழக்கமும். அவ்வளவு சீக்கிரம். மறைந்து விடுமா; என்ன?


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)