சித்தப்பா!

Su.tha Arivalagan
Oct 13, 2026,04:44 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


தெரிஸா அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஏஞ்சலினா, "இதோ பார்! சுசிலா! நீ மருந்து மாத்திரை ஒழுங்காக சாப்பிட்டதினால் பிள்ளைக்கு எச்‌ ஐ.வி  தொற்று பரவாமல் காப்பாற்றி  விட்டோம். ஆனால் பிள்ளைக்கு தாய்ப்பால்  உதவாது. இப்ப என்ன பண்ணப் போறோம்; என்றுதான் தெரியவில்லை. 


காளிமுத்தன் "டாக்டரம்மா! என்னிடம் பிள்ளையை கொடுங்க.  நான் நல்லா பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க! அண்ணி! நான் இவளை  பார்த்துக்கிறேன். அவளுக்கு சித்தப்பா நான் இருக்கேன்.


"நீ எப்படிடா, பார்த்துப்பே!" என்று கேட்டார் டாக்டரம்மா.




எங்க வளவுலே முத்தம்மா அக்காவுக்கு பிள்ளை பொறந்திருக்கு. அவங்களை இவளுக்கும் பாலூட்டச் சொல்கிறேன். நான் சொன்னா, அவங்க கேப்பாங்க. அக்கா வீட்டுக்காரரும் ப்ரைவேட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலைதான் பார்க்கறாங்க. அவங்க அக்காவிடம் சொல்லி தெளிய வைப்பாங்க. அதனாலே விவரம்  சொல்லியே நான் இவளுக்கு பாலூட்ட வைக்க முடியும். ஏழைக்கு ஏழை தான் துணை. அவங்க இந்த உதவிக்கு காசெல்லாம் கேக்க மாட்டாங்க. அவங்க சந்தோசம் தான் படுவாங்க." என்றான். 



குழந்தையின் பாதுக்காப்புக்காக, எச்‌.ஐ.வி மருந்துகளை அவனிடம் தர, விதவையான தன் அண்ணியிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான், சித்தப்பா காளிமுத்தன். 


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)