Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

Su.tha Arivalagan
Sep 09, 2026,12:29 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


போன வாரம் என் அண்ணன் வீடு சென்றிருந்தேன். வீட்டு வேலைகளில் அண்ணிக்கு உதவியாளராக அங்கு செல்லம்மாளை சந்தித்தேன். அண்ணிக்கு அவள் மேல் நிரம்ப அன்பு. வேலை சுமாராகத்தான் இருக்கும்;மோசம் என்று சொல்ல முடியாது. எதாவது காரணம் காட்டி வாரம் ஒரு முறை லீவு போட்டு விடுவாள்.


முக்கியமான நாட்களில் எப்படியும் விட்டுக் கொடுக்காமல் வந்து விடுவாள். சொல்லாமல் டிமிக்கி கொடுக்க மாட்டாள். கை வாய் சுத்தம். முன்பணம் கேட்காமல் அவள் வண்டி ஓடாது. என்ன செய்வது? வெகு நாட்கள் பழகிய காரணம்; அவளாலேயும் என்னை விட முடியாது. என்னாலும் அவளை விட முடியாது. ஒரு வினோதமான உறவு எங்களுக்குள்" என்றாள் அண்ணி.


ஒரு நாள் செல்லம்மாளை தனியே சந்தித்துப் பேச நேரம் கிடைத்தது. "செல்லம்மா! நீ ஏன் அடிக்கடி லீவு போடுகிறாய்? இப்படி முன்பணம் வாங்கியே வேலை செய்வது எத்தனை நாளுக்கு ஓடும்?" என்று கேட்க; அவள் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது




"ஆமாம் தங்கச்சி! என் வீடு போருரில் உள்ளது. வடபழனிக்கு காலை முதல் பஸ் பிடித்து வந்தால் மாலை நான்கு மணி பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன். இந்தப் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் ஆறு வீடுகளில் வேலை பார்க்கிறேன். இடையில் ஒரு மணி நேரம் ஐயர் அம்மா வீட்டில் ஒய்யாரமாய் ஒரு தூக்கம். ஐயரம்மா வீட்டு காஃபி சாப்பிட்டு அடுத்த ரவுண்டு வேலை. அண்ணி வீட்டில் மட்டுமல்ல நாலு வீட்டில் சம்பள அட்வான்ஸ் ஓடுது. வருஷத்திற்கு இரண்டு வீட்டில் மட்டும் ரொக்க சம்பளம். அது போதும் எனக்கு. 


இரண்டு  ஐயாயிரம் ரூபாய் சீட்டு போட்டு இருக்கேன் இருபத்தைந்து மாசத்திற்கும். சீட்டை தள்ளி எடுக்கவே மாட்டேன். கடைசி மாதம் வள்ளிசா மொத்தப் பணத்தையும் வாங்கிடுவேன்‌. நீயே சொல்லு அட்வான்ஸ் இல்லாமல் என் வண்டி ஓடுமா? வாரம் ஒரு நாள் காலையிலும் ஒரு நாள் மாலையிலும் எல்லார் வீட்டிலும் லீவு எடுத்து விடுவேன். அந்நேரம் ஒரு நடக்கமுடியாத ஒரு பிள்ளையை பத்மா சேஷாத்ரி ஸ்கூலில் விட்டு சாயங்காலம் வீட்டுக்கு கூட்டி வருவேன். சொல்லாம கொள்ளாம லீவு எடுத்தா , பிழைப்பு போய் விடும். லீவ் சமாசாரம் அப்படி போகுது.


எல்லார் வீடும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகள். ஒவ்வொரு நாளும் ஒரு ரூமை சுமாராகத்தான் சுத்தம் செய்வேன். ஒரு வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நேரம் இருக்காது; தங்கச்சி. ரொம்பவும் குறை சொல்லாமல் பார்த்துப்பேன் நேரத்தை எப்படியோ சமனம் பண்ணி சமாளிக்கிறேன். அண்ணிகிட்ட சொல்லிடாதே ; கண்ணு!; என்று கண்சிமிட்டலுடன் சொன்னதைக் கேட்டு நான் அயர்ந்து வியந்து போனதென்பதே உண்மை. 


நேரமே இல்லை என்று புலம்பும் இக்கால இளைஞர்கள் அவளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்; நேர மேலாண்மையை.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)