ஒரு வீடு காலியாகிறது!
- சசிகலா விஸ்வநாதன்
காலியாகும் வாடகை வீடு!
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தேன்!
நீங்கா நினைவுகளின்
சுழல்களில் மேலிருந்து
கீழே கீழே...
மூழ்கி விடுபட்டு;
எழுந்து மிதக்கிறேன்!
சில நினைவுகளை இங்கேயே விட்டு விடலாம்; என்று நினைத்தாலும்;
இயலுமா?
சில நினைவுகள் இங்கேயே இருக்கட்டும்.
வெற்று சுவர்கள்
எதிரொலித்து; எதிரொலித்து அவை நீர்த்தே போகட்டும்!
அவை அப்படியே முடிவதுதான் உகந்தது!
ஆனாலும்;
சில கனவுகளை எடுத்துச் செல்கிறேன்;
இங்கிருந்த நினைவுகள் கொடுத்த பரிசுகளாக!
நினைவுகளே கனவுகளை காட்சியாக்கும்!
வாழ்வுக்கு நிறம் கூட்டும்.
இன்று துளசி மாட அகல்
சுடர்விட்டு ஒளிர்கிறதோ!
அம்மாவின் குரல்:
"ஏதேனும் விட்டுப் போக வேண்டும்!
எடுத்து போகுதல் ஆகாது."
"வேண்டா நினைவுகளும்
கூடா கனவுகளும்"
இங்கேயே இருக்கட்டும்!"
" சரிம்மா"!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)