ராமாசாரி வாரிசு!

Su.tha Arivalagan
Oct 14, 2026,03:42 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


கல்லாவில் உட்கார்ந்திருந்த  அரும்பு மீசை இளைஞனை சாரதாவுக்கு எங்கோ பார்த்துப் பழகின முகம்  போலவே இருந்தது. யோசனையை பின்னே தள்ளி , ஒன்பது கஜம் புடவை பிரிவுக்கு வந்தாள்.


பீரோவில் அடுக்கிய இருந்த புடவைகளை சுவாரஸ்யம் இல்லாமல், நோட்டமிட்டவள், ஓரமாக காடா துணியில்  நேர்த்தியாக கட்டியிருந்த துணி அடுக்கைப் பார்த்தாள். அதிலிருந்த புடவைகளை உருவிப் பார்த்தாள். 


"அம்மா! இப்பத்தான் தறியிலிருந்து வந்திருக்கிறது. விலைச் சீட்டு கூட இன்னும் போடவில்லை." என்றார், சிப்பந்தி. என்ன விலையில் இருக்கும், என்று சாரதா கேட்டதுக்கு, "முதலாளியைத்தான்  கேட்கணும். இந்தப் புடவைகளின் ரேஞ்சில் தான் இருக்கும். கொஞ்சம்,முன்னே பின்னே இருக்கலாம்." என்று விற்பனையாளர் சொன்னார். 


ஆழ்ந்த நீல வண்ணத்தில் அடர் பச்சை நிறத்தில், தங்க நிற அன்னப் பறவைகள் வரிசை கட்டி நின்றிருக்கும் அழகில், மனதை பறி  கொடுத்த  சாரதா; அந்தப் புடவையை கையில் எடுத்து ஆசையாகப்  பார்க்கவும்," அம்மா! இந்த புடவை மட்டும் இருநூற்று  ஐம்பது ரூபாய் அதிக விலை. மீதி எல்லாம் ஆயிரத்து ஐநூறு." என்ற அந்த அரும்பு மீசை இளைஞனின் குரல்.




அவளுக்கு சிறு வயதில் ஒல்லி குச்சி கால்களுடன் சைக்கிளில் கட்டி வைத்திருக்கும் புடவைகளை தலைசுமையாக சுமந்து வந்த ராமாசாரியை நினைவ்படுத்தியது. அவரும் அப்படித்தான்; பெரியம்மாவும் அம்மாவும் தேர்ந்தெடுத்த புடவைகளுக்கு மட்டும்  விலையை இருபது ரூபாய் அதிகம்  சொல்வார். 


ஓவ்வொரு தரமும் ஒரு காரணம்; வேலைப்பாடுகள், கலர் சேர்க்கை., டபுள் நிறம்... இப்படி ஏதோ ஒன்று.  பெரியம்மாவும் சளைத்தவள், இல்லை. தான் தேர்ந்தெடுத்த புடவையை பிரத்தியேகமாக தனியாக எடுத்து வைக்க மாட்டாள். வேற ஏதேதோ புடவைகளைப் பற்றி ஆர்வமாக விசாரிப்பார். இறுதி நேரத்தில் " ஒரே மாதிரி புடவைகளுக்கு வெவ்வேறு விலை  சொல்கிறாயே! விலை  வேறு அதிகமாக  சொல்கிறாய். சரிப்பா! இது வேண்டாம். இதோ அதையே எடுத்துக்கிறேன்; என்று மனம் விரும்பும் புடவையை எடுத்துக் கொள்வார். 


இப்படித்தான் சில சமயம்  புடவைக்காரர் ராமாசாரியை, போக்கு காட்டி, பெரியம்மா ஜெயித்து விடுவார். சிலசமயம் அவருக்கும், சிலசமயம் பெரியம்மாவுக்கும் வெற்றி, மாறி மாறி  கிடைக்கும். அவர்களுக்குள் அந்த பேரம்  பேசுதல்,ஒரு விளையாட்டு! அப்போது இருபது ரூபாய்;  இப்போது இருநூற்று ஐம்பது;  அவ்வளவுதான்  வித்தியாசம்!


சாரதா," சரிப்பா! பரவாயில்லை! இதற்கே நீ பில் போடு‌." என்றவள்;" "தம்பி நீ ராமாசாரியின் பெயரனா?" என்று கேட்கும் முன்னே,  அவள் கண்ணில் சரிகை மாலையுடன் புன்முறுவலுடன் ராமாசாரியின்  ஃபோட்டோ கண்ணில் பட்டது. தாத்தா போலவே, இவனும்  வியாபார நுணுக்கத்தில் தேர்ந்திருக்கிறான், என்று நினைத்துக் கொண்டவள், முகத்தில் புன்னகை அரும்பியது.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)