Tourist Family.. படம் சூப்பர்.. உங்க தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்.. சசிகுமார் நெகிழ்ச்சி

Manjula Devi
May 17, 2025,10:25 AM IST

சென்னை: படம் சூப்பர் என்று யார் சொன்னாலும் மனம் சொக்கி போகும் சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். அந்த தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார் என நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


சசிகுமார் மற்றும் சிம்ரன் கூட்டணியில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு மக்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் விதமாக அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த  இப்படத்திற்கு மக்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். பல தரப்பட்ட மக்களும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவிப்பதால் திரையரங்குகளில் படத்தை பார்க்கச் செல்லும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதுவரை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது .மேலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திரை பிரபலங்கள் பலரும் டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். 





அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்துவிட்டு நடிகர் சசிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு   படம் நன்றாக இருப்பதாகவும், சசிகுமாரின் நடிப்பு சூப்பர் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு  நடிகர் சசிகுமார்  தனது instagram பக்கத்தில் நன்றியை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,


படம் சூப்பர் என யார் சொன்னாலும் மனம் சொக்கி போகும். சூப்பர் ஸ்டாரை படம் சூப்பர் என்று சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். அயோத்தி நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹார்ட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து சூப்ப்ப்பர்.. சசிகுமார் என அழுத்தி சொன்னார். 


தர்மசாஸ்தாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தை இல்லை. அந்த அளவுக்கு வாழ்த்திருந்தீங்க. பல சீன்களில் கண் கலங்கிடுச்சுங்க‌. சமீப காலமாக உங்களோட கதை தேர்வு வியக்க வைக்குது சசிகுமார் என ரஜினி சார் சொல்ல சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் நிறுத்தி அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் பேமிலி பட குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம் தட்டிக் கொடுத்தது உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார் என பதிவிட்டுள்ளார்.