சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
மதுரை : சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட போலீசார் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
2020ம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தந்தை-மகன் இருவரும் உயிரிந்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 2026ம் ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால் குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டனை என்ன என்பது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விபரங்களை மதுரை நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில். இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. நிரபராதிகள் என தெரிந்தும் இரவு முழுவதும் வைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. குற்றவாளிகள் நன்கு அறிவு வளர்ச்சி அடைந்தவர்கள். படித்தவர்கள். இது சாதாரண குற்றம் அல்ல. இது போன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியே இல்லை. இது போன்ற வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்தால் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். மற்றவர்களுக்கும் இதேபோல அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை தவிர 7 ஆண்டு, ஒரு ஆண்டு சிறை என கடுமையான தண்டனைகளை மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.