தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு
சென்னை: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வரும் பிப்ரவரி 21 முதல் 26 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன், திமுக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துரைக்கவும், அதிமுகவின் சாதனைகளை விளக்கவுமே இந்தச் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 21-ல் தொடங்கும் இந்தப் பயணம், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், பூந்தமல்லி, பொன்னோரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை உள்ளடக்கியது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
வழியில் பல இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியவும், தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்தத் தொடர் சுற்றுப்பயணம் அதிமுக தொண்டர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.