பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
டில்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ஐ ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிய தேர்தலை நடத்தக் கோரி பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' கட்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 6, 2026) விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்தது.
பீகார் சடசட்பை தேர்தல் 2025ம் ஆண்டு நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது மகளிருக்கு ரூ.10,000 உதவித் தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி லஞ்சம் கொடுக்கப்பட்டு, ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இந்த தேர்தல் செல்லாது என அறிவித்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமல் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல எனக் கூறி, சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோருக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளையும் நீதிபதிகள் முன் வைத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதியரசர் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, "உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டால், பிரபலம் தேடிக்கொள்வதற்காக நீங்கள் நீதிமன்றத்தை நாடுகிறீர்களா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்ததோடு, தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஜன் சுராஜ் கட்சிக்கு அறிவுறுத்தி, மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின்' கீழ் 25 முதல் 35 லட்சம் பெண் வாக்காளர்களுக்கு தலா 10,000 ரூபாய் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், இது தேர்தலை பாதித்துள்ளது என்றும் பிரசாந்த் கிஷோரின் கட்சி வாதிட்டது.
பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தியா கூட்டணி 35 இடங்களைப் பிடித்தது. பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதுடன், பெரும்பாலான வேட்பாளர்கள் வைப்புத் தொகையையும் (Deposit) இழந்தனர். இந்த மனுவின் மூலம் 2025 பீகார் தேர்தல் முடிவுகளை "செல்லாது" என அறிவிக்க ஜன் சுராஜ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.