நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

Su.tha Arivalagan
Sep 12, 2025,06:14 PM IST

டெல்லி: பட்டாசுக்குத் தடை விதிப்பதாக இருந்தால் அதை நாடு முழுவதும் பண்ணுங்க. தலைநகர் டெல்லிக்கு மட்டும் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை வருமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.


தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளுக்குத் தடை உள்ளது. இதை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தபோதுதான் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.


தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இதுகுறித்துக் கூறுகையில், ஒரு கொள்கை இருந்தால், அது நாடு தழுவிய கொள்கையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் டெல்லியில் இருக்கிறது என்பதற்காக, டெல்லி மக்களுக்கு மட்டும் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அமிர்தசரஸ் போன்ற நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கின்றன. 




கடந்த ஆண்டு அமிர்தசரஸுக்கு சென்றபோது, டெல்லியை விட அங்கு மாசுபாடு அதிகமாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் வசதியானவர்கள் என்பதற்காக, மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்காமல் இருக்கக் கூடாது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அவர் வலியுறுத்தினார்.


ஏப்ரல் மாதத்தில், டெல்லி மற்றும் NCR (National Capital Region) பகுதிகளில் பட்டாசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.


தற்போதைய தலைமை நீதிபதியின் கருத்தால் நாடு தழுவிய அளவில் பட்டாசுக்குத் தடை வருமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளது. பட்டாசுத் தொழிலை நம்பி பல லட்சம் பேர் உள்ளனர் என்பதால் இதில் பொத்தாம் பொதுவான தடை வருமா என்று தெரியவில்லை. அதேசமயம், அதிக புகை இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கும் வகையில் நடவடிக்கை வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.