SIR திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்ய நேரிடும்.. சுப்ரீம் கோர்ட் திடீர் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Sep 15, 2025,04:55 PM IST

டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முறைகேடு நடந்தால், அந்த மாநிலத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தையே (SIR) ரத்து செய்ய நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 


தேர்தல் ஆணையம் ஒரு அரசியல்சாசன அமைப்பு என்பதால், சட்டத்தின்படி செயல்படும் என்று நீதிமன்றம் நம்புவதாகக் கூறியுள்ளது. மேலும் பீகார் SIR செல்லுபடியாகும் தன்மை குறித்த இறுதி வாதங்களை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பீகார் SIR தொடர்பான தீர்ப்பு, நாடு முழுவதும் நடத்தப்படும் SIR-க்கு பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்வதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. 


பீகார் SIR-க்கு எதிராக மனு செய்தவர்கள், நாடு முழுவதும் நடக்கும் SIR குறித்தும் அக்டோபர் 7-ம் தேதி வாதிடலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 8-ம் தேதி, பீகார் SIR-ல் ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்றும், வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மட்டுமே தேர்தல் ஆணையம் பயன்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. முன்னதாக, வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்துடன் 11 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.


நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்படும் என்று நம்புவதாக நீதிபதிகள் கூறினர். "பீகார் SIR-ல் எங்கள் தீர்ப்பு, நாடு முழுவதும் நடத்தப்படும் SIR-க்கு பொருந்தும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏதாவது தவறு நடந்தால், அதை ரத்து செய்ய நேரிடும். அதே விதி நாடு முழுவதும் பின்பற்றப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் பொருந்தும்.


இந்த வழக்கு அக்டோபர் 7-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்று, பீகார் SIR மற்றும் நாடு முழுவதும் நடத்தப்படும் SIR குறித்து இறுதி வாதங்கள் நடைபெறும். இந்த வழக்கின் முடிவைப் பொறுத்தே, வாக்காளர் பட்டியல் திருத்தம் எப்படி நடக்கப் போகிறது என்பது தெரியவரும்.