லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Jun 04, 2026,08:57 AM IST
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள்களுக்குப் பிறகு சக நண்பர்களையும், ஆசிரியர்களையும் காண்பதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
இந்த ஆண்டு பொதுத்தேர்தல் காரணமாக மாணவர்களுக்கு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே கோடை விடுமுறை கிடைத்தது. முன்னதாக, ஜூன் 1-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கத்தரி வெயில் முடிந்த பின்பும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல், வெப்பம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று ஜூன் 1ம் தேதிக்குப் பதில் 4ம் தேதிக்கு பள்ளிக்கூடத் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கடந்த சில நாள்களாகவே பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள், வாசலிலேயே நின்று மாணவர்களை உற்சாகமாக வரவேற்று பேனா, பென்சில் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி திறக்கும் முதல் நாளான இன்றே விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.
அதேபோல், போக்குவரத்துத் துறையும் மாணவர்களின் வசதிக்காக புதிய இலவசப் பேருந்து பயண அட்டைகள் (Bus Pass) வழங்கப்படும் வரை, மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பேருந்து அட்டைகளைப் பயன்படுத்தியே அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி வளாகங்கள் மீண்டும் மாணவர்களின் சத்தத்தோடு களைகட்டத் தொடங்கியுள்ளன.