மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சென்ற சீமான், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். கடந்த ஜூலை 10ம் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் ஆடு மற்றும் மாடுகள் மாநாடு நடத்தினார்.
ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி தருமபுரியில் மலைகளின் மாநாட்டை நடத்தினார். இதனையடுத்து, தூத்துக்குடியில் கடல் மாநாடும், தஞ்சையில் தண்ணீர் மாநாட்டையும் நடத்தப்போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு இன்று சீமான் சென்றார். அப்போது அங்குள்ள மீனவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் கடல் மாநாட்டை நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், நிலத்தில் செய்வது மட்டுமல்ல விவசாயம் கடலில் செய்வதும் விவசாயம் தான். கடலில் நாள்தோறும் மீனவர்கள் படுகின்ற துயரங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். எல்லையைத் தாண்டி மீன்பிடிகிறோம் என்று கைது செய்யப்படுகிறோம். படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்
நம்மிடம் கடல் குறித்த புரிந்துணர்வு இல்லை. இந்திய கடற்பரப்பில் அதிக அளவில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கிறது. செத்து கரை ஒதுங்கும் மீன்கள் வயிற்றில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் தான் காணப்படுகிறது. இந்த கடலையும் கடல் மீனவர்களையும் கடல் சார்ந்த மீனவர்களை மீட்பதற்காக நவம்பர் 15ஆம் தேதி தூத்துக்குடியில் கடல் மாநாடு நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.