சீரகம் இல்லா உணவு சிறக்காது.. பழமொழி வடிவில் உணவு பழக்கம்!

Swarnalakshmi
Feb 19, 2026,02:16 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

இந்த தலைப்பில் நாம் இன்று அறிந்துகொள்ள இருப்பது  உணவு, ஆரோக்கியம் மற்றும் விருந்தோம்பல், பற்றிய பழமொழிகள்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", 
"நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு",
" பசி வந்தால் பத்தும் பறந்து போகும்"
"சீரகம் இல்லா உணவு சிறக்காது" போன்றவை மிகவும் பிரபலமான உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த முக்கிய தமிழ் பழமொழிகள் ஆகும்.





1.சுத்தம் சோறு போடும்.

விளக்கம்: உணவு சமைப்பதில் மட்டுமல்லாமல் அனைத்திலும் நாம் சுத்தமாக இருப்பதன் அவசியம் இப் பழமொழி உணர்த்துகிறது. உணவை சுத்தமாக தயாரித்து சாப்பிட்டால் உடல் நலம் பேணப்பட்டு பசிப்பிணி நீங்கும்.

2. "நீரை உண்,உணவை குடி "

விளக்கம்:  நாம் தண்ணீர் குடிக்கும் பொழுது மெதுவாக பருக வேண்டும்.உணவை நன்கு மென்று கூழ் போல குடிக்கும் அளவிற்கு  மென்று  உண்ண வேண்டும்.

3. "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை"

விளக்கம்: காய்ந்த இஞ்சியே சுக்கு. நம் உடல் செரிமானத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்து. சுப்பிரமணியன்- முருகனை  மிஞ்சிய கடவுள் உண்டோ? அதுபோல சுக்கு  மிகச் சிறந்த இயற்கையான மருந்து. இந்த கோடை காலத்தில் காபி, டீ தவிர்த்து சுக்குமல்லி காபி பனைவெல்லத்துடன் குடிப்பது மிகவும் நல்லது.

4. 'ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி, மூவேளை  உண்பான் ரோகி ".

விளக்கம்: ஒருவேளை மட்டும் உண்பவர் யோகி- ஆரோக்கியமானவர். இருவேளை உண்பவர் போகத்தை அனுபவிப்பவர். மூன்று முறை உண்பவர் நோயாளி ( ரோகி) ஆவார் என்பதை உணர்த்துகிறது.

5. "ஆயிலைக் குறைத்து ஆயுளை பெருக்கு"

விளக்கம்: Oil, oil,... ஆமாங்க  ஆயிலில்  பொறித்த    பண்டங்கள் அதாவது ஸ்நாக்ஸ் விரும்பாத குழந்தைகளும் இல்லை, பெரியவர்களும் இல்லை. டீப் ப்ரை ஐட்டம்ஸ் (deep fry items )தான் குழந்தைகளுக்கு ஏன் நமக்கும் மிகவும் பிடித்தமான உணவு. ஆயிலில் செய்த பூரி,  மசால், சிப்ஸ், பட்சணங்கள் என நினைத்தாலே பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும் இல்லையா?.. சாப்பிடலாம் ஆனால் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை எடுத்துக் கொள்வது சிறப்பு. முடிந்தவரை காய்கறிகளை வேகவைத்து குழம்பிலும், வெஜிடபிள் சாலட், வெஜிடபிள் சூப் போன்று செய்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

6. "தன் காயம் காக்க வெங்காயம் போதும்".

விளக்கம்: நம் உடலை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இப்பழமொழி. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆதலால் எந்த விபரமும் தெரியாதவனை, எந்த ஒரு விஷயமும் தெரியாவிட்டால் 'வெங்காயம் 'என்று கேலியாக கூறுவோம் இல்லையா.?. ஆனால் வெங்காயம் மருத்துவ குணம் வாய்ந்தது. எந்த காயமும் படாமல் நம்மை அழ வைப்பதில் வெங்காயம் சிறப்பு வாய்ந்தது.உரிக்க உரிக்க கண்களில் கண்ணீர் வருகிறது இல்லையா? அதற்கு காரணம் அதில் உள்ள வேதிப்பொருள் காற்றோடு கலப்பது தான். ஆனாலும் வெங்காயத்தில் அதிக பலன்கள் உண்டு இரும்புச் சத்து,புரதச்சத்து, விட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச்சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை இளமையாக இருக்கவும், கண்பார்வை,ரத்த விருத்தி போன்றவற்றை அளிப்பதிலும் முக்கிய பங்கு வெங்காயத்திற்கு உண்டு.

விருந்தோம்பல் பற்றி பழமொழிகள்:

1."விருந்தும் மருந்தும் மூன்று நாள்". 

விளக்கம்: எவ்வளவு உறவாக இருந்தாலும் விருந்தினராக பிறர் வீட்டுக்கு செல்லும் பொழுது மூன்று நாட்களுக்கு மேல் தங்கினால் அதில் பல பிரச்சினைகள் உருவாகும். அவ்வாறே மருந்தும்.எதுவாக இருந்தாலும் விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல .

2. "அம்மான் வீடானாலும் 7 நாட்களுக்கு தான் வசதியாய் இருக்கும்". விளக்கம்:

சொந்த வீடாக இருந்தாலும் விருந்தினராக நீண்ட நாட்கள் ஒருவர் வீட்டில் தங்கி இருப்பது சிறந்ததல்ல.

3. "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை "

விளக்கம்:  அன்றாடம் புதிய விருந்தினரை போற்றி உபசரிப்பவரின் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும். யாரேனும் வீட்டிற்கு வந்தால் அவர் பருகவோ, உண்ணவோ ஏதேனும் சாப்பிட கொடுத்து உபசரிப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.

மேலும் இது போன்ற சுவாரசியமான பழமொழிகள் பற்றிய தகவல்களை அடுத்த பதிவிலும் காண்போம். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.