சீதா!
- கி. அனுராதா
மூன்று மகள்களில் மூத்தவள் சீதா. மிக அமைதியான பொறுமையான பொறுப்புடையவள் என்ற பெயருக்கு சொந்தக்காரி சீதா. தந்தை மாதாந்திர வருமானத்தில் ஒரு நிரந்தரம் இல்லாத அலுவலகத்தில் பணிப் புரிந்தார். தாயார் மூன்று மகள்களைக் கவனிப்பவர் மற்றும் வீட்டு பணிகளைச் செய்வதில் அவர் நேரம் கழியும்.
மூன்றும் மகளாய் பிறந்ததே என்ற கவலை பெற்றோர்களுக்கு . பள்ளிக் கட்டணம், பராமரிப்பு அதனோடு உணவு மற்றும் இதர செலவுகள் அதிகமாக இருந்தது. அதனால் சீதாவை இரு வருடம் ஒரு பள்ளி என்று மாற்றிக் கொண்டே இருந்தனர். சீதாவும் தளராமல் படித்தாள். தன் இரு தங்கைகளையும் மகள்கள் போல் பார்த்துக் கொண்டாள். அவர்களுக்கு தேவையான அனைத்து விருப்பங்களையும் செய்ய முயன்றாள்.
தன் ஏழாம் வகுப்பில் கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தாள். தன் முதல் கட்டுரை தந்தையின் அலுவலக ஆண்டு விழா பத்திரிக்கையில் வெளி வந்தது. மிகுந்த சந்தோஷம் அனைவருக்கும். உறவுகள் மட்டுமல்லாமல் தெரிந்தவர்களும் கூடி சீதாவைப் பார் என்று தங்கள் குழந்தைகளிடம் கூறும் அளவிற்கு சீதா உயர்ந்துக் கொண்டே வந்தாள். அவள் மனதில் லட்சியம் ஒன்று உருவாகத் தொடங்கியது. படித்து பெரிய அளவில் பதவி கிடைக்க வேண்டும். ஐந்து இலக்க ஊதியம் பெற வேண்டும். தன் தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் மற்றும் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும் என்று எண்ணினாள்.
எட்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் இலக்கியக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் நடக்கப் போகிறதை ஆசிரியர் மூலம் அறிந்தாள். ஆசிரியர் உன்னால் முடியும் என்று ஊக்குவித்தார். அதன் பலனாக மாவட்டத்திலேயே முதல் கட்டுரையாளராக சீதா தேர்ந்தெடுக்கப் பட்டாள். கட்டுரையின் தலைப்பு வரதட்சனண . நடுவர்கள் சீதாவை அழைத்து இந்த வயதில் இப்படியொரு தலைப்பை பற்றி எழுத எவ்வாறு தோன்றியது என்று கேட்டார்கள். அதற்கு சீதா , ஐயா, நாங்கள் மூன்று பெண் குழந்தைகள் ஆதலால் என் தாய் தந்தையர் எப்பொழுதும் இதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு சோகத்தில் ஆழ்வர். அதுதான் மனதில் ஆழமாக வேரூன்றி பதிந்து விட்டது என்றாள்
ஒன்பதாம் வகுப்பு மீண்டும் புதிய பள்ளி. இப்பள்ளியில் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி . கிறிஸ்துவ சகோதரிகளால் இயக்கப்படும் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் மூவரையும் சேர்த்தனர். நுழைவு தேர்வு விண்ணப்பம் வழங்கல் நடந்தது. தந்தை காலை மூன்று மணிக்கே வரிசையில் நிற்கச் சென்று விட்டார். விண்ணப்பத்தில் மூவருக்கும் ஆங்கில வழி கல்வி என்று எழுதினோம். நுழைவு தேர்வுக்கு சீதா அழைக்கப்பட்டாள். ஆனால் தமிழ் வழி தேர்வு தாள் கொடுத்தனர் . சீதாவிற்கு பயம் தொற்றியது. சகோதரி நிர்மலா அவர்களிடம் கேட்டாள். அவரோ ஆங்கில வழி கல்வி மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். ஆகையால் இந்த தேர்வை எழுது என்றார். சீதாவிற்கோ கணினி துறையில் தன் தடத்தை பதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவள். தமிழ் வழி என்றால் அது முடியாதே. வந்த ஆசிரியர் இடத்தில் விவாதம் செய்தாள். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சீதா நடந்த அனைத்தும் கூறினாள். அவரோ ஆம் உண்மை முடிந்தால் எழுது இல்லை என்றால் சென்று விடு என்றார்.
சீதாவிற்கு அழுகை கோபமாக மாறியது. ஏன் ஏமாற்றுகிறார்கள் ? ஆங்கில வழி விண்ணப்பம் 200 ரூபாய், தமிழ் வழி கல்வி விண்ணப்பம் 100 ரூபாய். யாரை ஏமாற்ற இந்த முறை என்று கேட்டாள். மேலும் எல்லோரிடத்திலும் தெரிவித்து உங்கள் நாடகத்தை அம்பலப்படுத்துவேன் என்று உரக்கக் கூறி வெளியே செல்ல முயன்றாள். தலைமை ஆசிரியர் அவளை தடுத்து, சரி உனக்கு கடினமான தேர்வுத்தாள் தருகிறோம். அதில் 90 க்கு மேல் வாங்கினால் உனக்கு அனுமதி உண்டு என்று வாக்கு கொடுத்தார்.
சீதா அடுத்து செய்தது என்ன தெரியுமா?
(தொடரும்)
(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)