என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

Meenakshi
Feb 10, 2026,06:19 PM IST

சென்னை: என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை. சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று  பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


புதியபாதை திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் தான் பார்த்திபன். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சீதா. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்தப் படம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இவர்களது நிஜ வாழ்க்கையிலும் ஒரு புதிய பாதையை அமைத்தது என்றே சொல்லலாம்.


சீதா அந்தச் சமயத்தில் ஒரு முன்னனி நடிகையாக இருந்தார். பார்த்திபன் வளர்ந்து வரும் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார். பல தடைகளைத் தாண்டி, 1990-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சீதா திரையுலகை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், ராதாகிருஷ்ணன் என்ற மகனை இவர்கள் தத்தெடுத்து வளர்த்தனர். 




சுமார் 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2001-ம் ஆண்டு இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது பிரிவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. விவாகரத்திற்குப் பிறகு சீதா மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார். குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார். பார்த்திபன் தனது தனித்துவமான இயக்கத்திலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி, தேசிய விருதுகள் பலவற்றை வென்று சாதனை படைத்து வருகிறார்.


இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பார்த்திபன்  பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்,  நான் சீதாவை பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை. சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். சீதாவுடன் வாழ்ந்த அந்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை. எது நடந்ததோ அது என் வாழ்க்கையில் நன்றாகவே நடந்தது. ஆனால், இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். 


இப்ப இருக்கும் காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமே திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள். எந்த பெண்களுமே திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை, அனைவருமே சுதந்திரமாக அவர்களுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். விவகாரத்து என்பது இப்பொழுது மிகவும் எளிமையாகி விட்டது. ஆறு மாதங்களிலேயே விவகாரத்து கேட்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே ஒத்து வராது என தெரிந்த பிறகு எதற்காக போராடிக் கொண்டு இருக்க வேண்டும். முன்பெல்லாம் இந்த சமுதாயம் என்ன சொல்லுமோ என்கின்ற பயம் இருந்தது. 


ஆனால், இப்போது இந்த சமுதாயத்தின் மீது பயம் குறைந்துவிட்டது இந்த சமுதாயத்திற்காக நான் வாழ வேண்டுமா? இல்லை எனக்காக நான் வாழ வேண்டுமா என கேள்வி வந்துவிட்டது. இப்பொழுது நான் நினைப்பது என்னவென்றால் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்திருந்தால் அதை 12 வருடமாக இழுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை இன்னும் கொஞ்சம் முன்பாகவே முடிவு செய்து பிரிந்து இருக்கலாமே என்று தான் நான் நினைக்கிறேன். இருவரும் பிரிந்து இருக்கிறோமே தவிர குழந்தைகளின் திருமண விஷயத்தை இருவரும் சேர்ந்துதான் முடிவு எடுத்தோம். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. மனைவி என்கின்ற ஸ்தானம் என்றும் அவருக்கு மட்டும் தான். என்னுடைய மீதி வாழ்க்கை சினிமாவில் மட்டும் தான் இருக்குமே தவிர திருமண வாழ்க்கையில் இருக்காது. இதை நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன் மீண்டும் இந்த பேட்டியின் மூலமாக அனைவரிடமும் சொல்லிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.