தவெக.விற்கு வரலாம்.. டி. ஜெயகுமாருக்கு கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு
Mar 05, 2026,04:42 PM IST
சென்னை : ஜெயகுமாருக்கு அதிமுக.,வில் இந்த முறை சீட் கிடைக்க போவதில்லை. அவர் வேண்டுமானால் தவெக.,விற்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று தஞ்சையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக.,வை மறைமுகமாக தாக்கி பேசினார். திமுக, அதிமுக இரு கட்சிகளும் மறைமுகமாக கூட்டணி வைத்து தமிழக மக்களை ஏமாற்றி, ஊழல் செய்து வருவதாக தெரிவித்தார். இத குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அறிவித்து பார்த்தார் விஜய். அப்படி இருந்தும் அவர்கள் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் தற்போது அவர் எங்கள் பக்கம் வந்திருக்கிறார். எங்களை சீண்டினால் நன்கு வாங்கி கட்டிக் கொள்வார். முதலில் விஜய்யை செய்தியாளர்களை சந்திக்க சொல்லுங்கள். யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே மனப்பாடம் செய்து மேடையில் ஒப்பிக்கக் கூடாது. அவர் கை தேர்ந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது ஆதவ் மற்றும் அருண் எழுதி கொடுத்த ஸ்கிரிப்டில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் இன்று பதிலளித்துள்ளார். இந்த முறை ஜெயக்குமாருக்கு அதிமுக.,வில் சீட் கிடைக்க போவதில்லை. அந்த ஆதங்கத்தில் தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டுமானால் தவெக பக்கம் வரட்டும் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ்.,ஐ தொடர்ந்து திமுக.,வில் இணைய உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் திமுக பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு புறம் தவெக.,வில் இருந்து செங்கோட்டையன், அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.