பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
சென்னை: தவெக தலைவர் டெல்லி சென்றிருப்பது ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சி. ஆனால் ஒரு போதும் பாஜகவின் முயற்சிவெற்றி பெறாது என்பது தான் உண்மை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நாங்கள் எங்களது கருத்தை சொல்லி இருக்கிறோம். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. ஆட்சியில் பங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி சேர்ந்து முடிவு எடுப்பார்கள். தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்.
கரூர் விகாரத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக விசாரித்து கொண்டிருந்தது. ஆனால், சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அனைவரையும் துன்புறுத்துகிறது. இப்போது தவெக தலைவரையும் சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்துள்ளனர். இது ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சி.
ஆனால் ஒரு போதும் பாஜகவின் முயற்சிவெற்றி பெறாது என்பது தான் உண்மை. பாஜகவினர்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் அனைத்தையும் சிதைப்பார்கள். இது தான் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
அவர்களை எதிர்த்தால் ஊழல் வழக்கு, சிபிஐ ரைடு உள்ளிட்டவற்றை கொண்டு வருவார்கள்.அவர்களுடன் சேர்ந்து விட்டால் வெள்ளை உடை அணிவித்து புனிதர் என்று பட்டம் சூட்டுவார்கள். இது தான் பாஜகவின் கடந்த கால வரலாறு என்று தெரிவித்துள்ளார்.