தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
ஈரோடு: கூட்டத்தை பார்க்கும் போது நாளை தமிழகத்திவ் முதல்வர் விஜய் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், பெரியார் பிறந்த மண்ணுக்கு தவெக தலைவர் விஜய் வருகைதந்துள்ளார். நாளைக்கு ஆட்சிக்கு வரப்போவது புரட்சி தளபதி தான்.
கூட்டத்தை பார்க்கும் போது நாளை தமிழகத்தின் முதல்வர் விஜய் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நல்ல தலைவர் வேண்டும் என்று மக்கள் பல நாள் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. விஜய் மனித நேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக வரலாற்றில் மக்களுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்தவர்களில் புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதி தான்.
234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர் தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர். ஒரு ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருவாயை விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். என்னை பொறுத்தவரை இது தீர்ப்பளிக்கும் கூட்டம். இந்தக் கூட்டம் நாளைய தமிழகத்தின் வரலாற்றை படைக்கும் கூட்டம் என்று தெரிவித்துள்ளார்.