விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
கோவை: விஜய் தான் உண்மையில் அரசியல் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல. அது ஒரு ஈகோ பிரச்சனை.
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது மிகவும் தவறான செயல். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பாஜக -அதிமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. அதிமுக அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஜனநாயகத்தின் குரல்வலை தொடர்ந்து நெரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஈரோட்டை மஞ்சள் நகரம் என்று நடிகர் விஜய் கருத்தை முன்வைத்துள்ளார்.மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய அரசு தான். மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும். விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் பாஜக 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையை செய்துள்ளது. அதனால், மக்களுக்கும் எங்களுக்கு எந்த அளவிற்கு தொடர்பு இருக்கும் என்பதை விஜய் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் விஜய் தான் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் தன்னை தான் களத்திற்கு சம்மந்தமில்லாதவர் என சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தில் தப்பக்க முடியாது. இது ஏதோ தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை. அவை எப்போதும் தொடரும் நடைமுறை. உதயநிதிக்கு இது எல்லாம் புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. அவருக்கு எழுதித் கொடுப்பவர்கள் எதுகை, மோனையில் எழுதித் தருகிறார்கள். திமுக ஆட்சியில் கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர். அதற்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாமே. தீய சக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை என்று தெரிவித்துள்ளார்.