இளமை திரும்பிய தருணம்.. கூடுவாஞ்சேரியில் கோலாகலமாக நடந்த மூத்த குடிமக்கள் சங்கமம்

Su.tha Arivalagan
Mar 02, 2026,11:29 AM IST

- கூடுவாஞ்சேரி கோமதி சந்திரமெளலி


சென்னை: வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், கூடுவாஞ்சேரி விவேகானந்தாபுரம் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில் ஒரு நெகிழ்ச்சியான விழா நடைபெற்றது. 


பிப்ரவரி 28, 2026 அன்று விவேகானந்தபுரம் குடியிருப்போர் நலவாழ்வு சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களின் மூத்த குடிமக்களுக்காக அவர்களை மகிழ்விக்கும் விதத்தில், மூத்த குடிமக்கள் சங்கமம் என்ற விழாவினை நீலன் பள்ளியில் ஏற்பாடு செய்ய்பட்டிருந்தது. இந்த விழா, அப்பகுதி பெரியவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும், பழைய நினைவுகளையும் மீட்டுத்தரும் பாலமாக அமைந்தது.




வழக்கமான கூட்டங்கள் போலல்லாமல், இந்த விழா முழுவதுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. சங்கத்தின் காப்பாளரும், நீலன் பள்ளியின் தாளாளர் முன்னிலையில் விழா இனிதே தொடங்கியது. 55 வயதைக் கடந்த பெண்களின் உற்சாகமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அரங்கையே அதிரச்செய்தன.


தங்களின் அன்றாடப் பணிகளையும், உடல் உபாதைகளையும் மறந்து, சிறு குழந்தைகளைப் போல பாட்டுப் பாடியும், விடுகதைகள் போட்டும் முத்தகுடிமக்கள் அசத்தினர்.




விழாவின் சிறப்பம்சமாக, தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முருகானந்தம் மற்றும் அவரது மனைவி அவர்கள், நமது வாழ்க்கை பயணம் என்ற தலைப்பில் ஒரு கவிதையை வாசித்தனர். மனித வாழ்க்கையை 8, 8 ஆண்டுகளாகப் பிரித்து அவர் வாசித்த விதம், அங்கிருந்தவர்களின் வாழ்நாள் அனுபவங்களை கண்முன் நிறுத்தியது.


இந்த விழாவில் பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது வாழ்க்கைத்துணையுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 




தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் ரமேஷ் - திருமதி. ரமேஷ் தம்பதியினர், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆத்மநாதன் - திருமதி. ஆத்மநாதன் தம்பதியினர், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் (தாசில்தார்) செல்வராஜ் - திருமதி. செல்வராஜ் தம்பதியினர்.


விழாவில் கலந்து கொண்ட ஜோடிகளில் அதிகம் கவனத்தை ஈர்த்தது, கனகசுந்தரம் - திருமதி. கனகசுந்தரம் தான். இத்தம்பதியரில் கணவருக்கு 83 வயது, மனைவிக்கு 63 வயது. அக்காலத்து முறைப்படி வயது இடைவெளியுடன் மணம் முடித்து, இன்றுவரை வெற்றிகரமாக இல்லறம் நடத்தி வரும் இவர்களைக் கண்டு அனைவரும் வியந்து வாழ்த்தினர்.




பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. பரிசுகளைப் பெற்ற மூத்தகுடிமக்கள் பேசுகையில், இந்தத் தருணத்தில் நாங்கள் மீண்டும் எங்கள் சிறுவயதுக்கே சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வளவு மகிழ்ச்சியாக நாங்கள் இணைந்து கொண்டாடி நீண்ட நாட்களாகிவிட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


முதுமையிலும் தனிமையைத் தவிர்த்து, இது போன்ற சமூகக் கூடல்கள் மனித மனங்களுக்கு எவ்வளவு பெரிய மருந்தாக அமையும் என்பதற்கு இந்த மூத்த குடிமக்கள் சங்கமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.