Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தகவல் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக எம்எல்ஏ ஒருவரிடம் குதிரை பேரம் நடத்தியதாக சொல்லப்படும் வழக்கில், கையான 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரைணக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் தற்பொழுது தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், திருவல்லிக்கேணி காவல் துறையினர் இந்த அதிரடி லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நாட்டின் எந்தவொரு விமான நிலையம், துறைமுகம் அல்லது சர்வதேச எல்லைகள் வழியாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்துப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கும் (Immigration) வழங்கப்படும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையாகும்.
செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கியப் போக்குவரத்து முனையங்களுக்கும் இவர்களின் விவரங்கள் அனுப்பப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய வழக்கு மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தவெக குதிரை பேர வழக்கு தொடர்பாகப் பதிவான இந்த விவகாரத்தில், அடுத்தகட்டமாக காவல் துறை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தலைமறைவாக உள்ள இருவரையும் விரைந்து கைது செய்யப் போவதாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.