கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சென்னை: கோடை காலத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி வெயில் அதிகரித்து வரும் நிலையை கூட பொருட்படுத்தாமல், தொடர் விடுமுறையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை படை எடுக்க துவங்கி விட்டனர். ஆனால் 10 ,11, 12,வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் நிறைவடைந்துவிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதனால் ஏப்ரல் இறுதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.
இந்த கோடை விடுமுறை காலத்தில் ஏராளமான மக்கள் தனது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிப்பது வழக்கம். இதனால் பொதுமக்கள் ரயில், மற்றும் பேருந்து சேவைகளை அதிக அளவில் பயன்படுத்துவர். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டல் நெரிசல் அதிகரித்து காணப்படும். பேருந்துகளின் தேவையும் அதிகரிக்கும்.
இதனை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக 20 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே முதல் வாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.