ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்டுள்ள மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 6-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷபாலி வர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 அரை சதங்களுடன் 236 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 118 ஆக உள்ளது. இலங்கைத் தொடரில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீராங்கனை இவரே ஆவார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா, 3-வது இடத்தில் நீடிக்கிறார். அண்மையில் 10,000 சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டியது குறிப்பிடத்தக்கது. ரிச்சா கோஷ் 7 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை மற்றுமொரு வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.
தீப்தி சர்மா பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரேனுகா சிங் பந்துவீச்சாளர் தரவரிசையில் 8 இடங்கள் எகிறி, 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்ரீசரணி 17 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தைப் பிடித்துள்ளார். அறிமுக வீராங்கனை வைஷ்ணவி சர்மா ஒரேடியாக 390 இடங்கள் முன்னேறி 124-வது இடத்திற்கு வந்துள்ளார்.
ஷெபாலி வர்மா கடந்த 2020-ஆம் ஆண்டு தனது 16-வது வயதிலேயே ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.