Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
- செ. சாந்தி சின்னத்தம்பி
இப்படி ஒரு சூழலில்
இப்படி ஒரு வாழ்வை
இப்படியே வாழ்ந்திட ஏங்குகிறது
என் மனது ...
தாள் கொண்ட நீரைத் தலையாலே
தான் தரும் தென்னையும்...
பச்சைப் பட்டாடை உடுத்திய நில மகளும்...
அங்கும் இங்குமாய் காற்றில் அலைந்து
இன்னிசை பாடும் தென்னங்கீற்றின் ஓசையும் ...
காணி நிலம் வேண்டும் என்று பாடினானே....
முண்டாசுக் கவிஞன் ...
அவன் வரிகளை
அசை போட்டேன்...
நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடுகிறது ...
வாய்க்குமா இப்படி ஒரு வாய்ப்பு ...
கவலைகள் மறந்து
கடமைகள் மறந்து
பேராசைகள் துறந்து
இயற்கையின் அமைதியில் இணைந்திடவே
ஆசை கொண்டேன் ...
இறைவா தருவாயா எனக்கும் ஒரு வரம்... ??
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)