Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!
நியூயார்க் : அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகனும், மூத்த பத்திரிகையாளருமான இஷான் தரூரும் தனது வேலையை இழந்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் 'வேர்ல்ட்வியூ' என்ற சர்வதேச அரசியல் குறித்த பகுதியை நடத்தி வந்த இஷான் தரூர், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இன்று வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்திலிருந்து நானும், சர்வதேச பிரிவைச் சேர்ந்த பல சக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் விளையாட்டுப் பிரிவு, புத்தக விமர்சனப் பிரிவு மற்றும் பல சர்வதேச அலுவலகங்களை அந்த நிறுவனம் மூடியுள்ளது. மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக ஆசிரியர் மாட் முர்ரே தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ், நஷ்டத்தைக் குறைப்பதற்காக தனது 12 ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த கட்டுரையாளர் இஷான் தரூர் உட்பட நூற்றுக்கணக்கான திறமையான பத்திரிகையாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. இது ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.