தினம் தினம் கொண்டாட்டமா?
- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்
மகேஷ் பள்ளியிலிருந்து வருகிறான்.
"அம்மா, நாளைக்கு டீச்சர்ஸ்டே வாம். டீச்ச்ருக்கு ஏதாவது வெகுமதி தரனுமாம். கேட்டாங்க"
"சரி, தரலா"
அங்கு வந்த பர்வதம் கேட்டார்.
"மாலதி, மகேஷுக்கு என்னவாம்?"
"நாளைக்கு டீச்சர்ஸ் டேவாம். அதுக்கு வெகுமதி தரணும்னு டீச்சர் கேட்டாங்க"
"நீ என்ன சொன்னே?"
"தரலாம்னு சொன்னேன்"
"என்ன இது புதுசா ஒரு வழக்கம்? அதான் டீச்சருக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டறோமே. அதுல எடுத்துக்கிறது. என்னமோ, அந்த டே இந்த டேன்னு சொல்லி பணம் பிடுங்கறது வழக்கமா போயிடுச்சு. எனக்கு எதுவும் பிடிக்கலை. இந்த மாதிரி கொண்டாடறதை முதல்ல நிறுத்தனும்"
அன்று இரவு கணவன் ராமனிடம் நடந்ததைக் கூறினாள்.
"அம்மா, அந்த காலத்து மனுஷி. எதுவும் தெரியாது. நாம வெகுமதி வாங்கி கொடுத்திடலாம்"
சில நாட்கள் கழித்து
"நாளைக்கு அன்னையர் தினம். அம்மாவுக்கு ஏதாவது பரிசு தரணும்"
"அம்மாவுக்குதான் அதெல்லாம் பிடிக்காதே".
"அதெல்லாம் சும்மாங்க. இன்னிக்கு பக்கத்து வீட்டுக்காரம்மாவோட பேசச்சே நாளைக்கு அன்னையர் தினத்துக்கு என் பையன் என்ன வாங்கித் தரப்போறான்னு தெரியலை அப்படீன்னு சொல்லிண்டிருந்தாங்க. எனக்கு கூட இதெல்லாம் பிடிக்கலை. இதிலேயே பாதி மனஸ்தாபம் வந்துடும்."
"சரி விடு. அம்மாதானே. வாங்கிக் கொடுத்திடலாம்"
---------------------------
சில நாட்கள் கழித்து
"என்னங்க, நாளைக்கு மனைவியர் தினம். எனக்கு என்ன வாங்கித் தரப்போறீங்க?"
"நீ கூடவா.......?"
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)