எனக்கும் கடிதம் வந்தது!

Su.tha Arivalagan
Oct 16, 2026,05:18 PM IST

- ராஜஸ்ரீ 


இது  1970 ஆம் வருட காலத்து கதை. 


ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள். பெரியவள் கமலா. சிறியவள் விமலா. கமலாவின் தந்தை நல்ல வேலையில்  இருக்கிறார். விமலாவின் தந்தை  ஒரு  சாதாரண விவசாயி. அவ்வளவாக எழுத  படிக்கத் தெரியாது. இருந்தாலும் விமலாவை கஷ்டப்பட்டு படிக்க வைத்து விட்டார்.


கமலாவிற்கு மாதந்தோறும்அவள்  தந்தையிடமிருந்து கடிதம் வரும்.  ஆனால் விமலாவிற்கு வராது. ஒரு நாள் கமலா விமலாவிடம்  உங்க அப்பா ஏன் கடிதமே போடுவதில்லை. உன் மீது பாசமில்லையா? என்று கேட்டாள்.


விமாலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெற்றோருக்கு கடிதம்  எழுதும் அளவிற்கு எழுத  படிக்க தெரியாது என்று எப்படி சொல்வது? என குழம்பினாள். பிறகு அந்த ஊர்ல தபால் ஆபீஸ் கிடையாது.  பக்கத்து கிராமத்துலதான் இருக்கு.  அதனால்தான் கடிதம் போட முடிவதில்லை என்று கூறி சமாளித்து விட்டாள்.


அதைக்கேட்ட கமலா அப்படியா என்று கூறி அந்த பேச்சை விட்டுவிட்டாள். விமலா மிகவும் குழம்பினாள். இதுகுறித்து தன் கணவனிடம் தெரிவிக்க விரும்பவில்லை.




ஒரு வாரம் கழித்து கமலா விமலாவிடம் கடையில் சில பொருட்களை வாங்கி வரச்சொன்னாள். விமலாவும் கிளம்பினாள். அப்பொழுது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. 


முதலில் தபால் ஆபீசுக்குச் சென்று இன்லேண்ட் லெட்டர்  வாங்கினாள். அப்பா எழுதுவது போல் தானே எழுதி தபால் பெட்டியில் போட்டு விட்டாள்.


மறுநாள் வாசலில் சார்..போஸ்ட் என்ற குரல் கேட்டது.


கமலா எனக்குதான் வந்திருக்கும் என்று வாசலுக்குச் சென்று தபால்காரரிடம் கடிதத்தை வாங்கினாள். பிறகு அதைப் பார்த்ததும்  விமலா, உனக்குத்தான் வந்திருக்கு  என்றாள்.


விமலா எனக்கா? ஆச்சரியமா இருக்கே. யார் அனுப்பியிருப்பார்கள்? என்று தெரியாத மாதிரி கேட்டாள்.


பிறகு அதை வாங்கிப் படித்துவிட்டு அப்பாதான் எழுதியிருக்கிறார். அந்த ஊர்ல தபால் ஆபீஸ் வந்துடுத்தாம். இனி அடிக்கடி கடிதம் எழுதுவாராம். என்னையும் எழுதச் சொன்னார். உங்களை மிகவும்  விசாரித்தார் என்றாள்.


அதைக் கேட்ட கமலா  பரவாயில்லையே, போன வாரம்தான் இதுபற்றி பேசினோம். உடனே அது நடந்துடுத்தே என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.


விமலா அடிக்கடி தபால் ஆபீசுக்குச் சென்று தனக்குத்தானே  கடிதம் எழுதி போட்டுக் கொண்டாள். அதனால் அவளுக்கு  மாதத்திற்கு இரண்டு கடிதங்கள் வந்தன.


கமலாவிற்கு சற்று பொறாமை ஏற்பட்டது. அவள் மனதிற்குள்  நல்ல நிலைமையில் இருக்கும் நமது அப்பா மாதம் ஒரு கடிதம்தான் போடுகிறார். அதுவும் போஸ்ட்கார்டில். ஆனால் ஏழை விவசாயியாக இருக்கும் விமலாவின் அப்பா மாதம் இரண்டு கடிதம் போடுகிறார். அதுவும் இன்லேண்ட் லெட்டரில் என்று நினைத்துக் கொண்டாள்..


இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கமலா விமலாவிடம் உங்கப்பா எழுதின கடிதத்துல ஒன்றை காட்டேன் என்றாள்.


அதற்கு விமலா நான் ஏன் காட்டனும்? நீங்க காட்டறீங்களா? என்று கேட்டாள். உடனே கமலா தனக்கு வந்த கடிதங்கள்  அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள்.


விமலாவிற்கு தப்பிக்க வழி தெரியவில்லை. வேறு வழியின்றி ஒரு கடிதத்தை காண்பித்தாள். கமலா அதில் இருந்த அஞ்சல் முத்திரையை உற்று நோக்கினாள. விமலாவிற்கு வயிற்றை கலக்கியது.


என்ன இது, நம்ப ஊர்ல போஸ்ட் பண்ணின மாதிரி இருக்கே. விமலா உண்மையை சொல் என்று கமலா சற்று அதட்டுவதுபோல் கேட்டாள்.


உடனே விமலா அழுது கொண்டே அக்கா, என்னை மன்னித்து விடுங்கள். உண்மையிலேயே எனக்கு கடிதம்  வரவில்லை. நானாக எங்க அப்பா கடிதம் எழுதியது போல் எழுதி நம்ப ஊர் தபால் ஆபீசில் போஸ்ட் செய்தேன்

என்றாள்.


கமலா ஏன்  அப்படி செய்தாய்? என்று கேட்டாள்.


அக்கா, உங்க அப்பா நல்ல  நல்ல வேலையில இருக்கிறார். அதனால் அடிக்கடி கடிதம் போடுகிறார். ஆனால் எங்கப்பா ஒரு விவசாயி. அவ்வளவாக எழுத படிக்கத் தெரியாது. அதனால அவருக்கு கடிதம் எழுதத் தெரியாது.  உங்களுக்கு உங்கள் அப்பா கடிதம் எழுதுவதை பெருமையாகக் நீங்கள் கூறும் பொழுது என் மனதுக்கு என்னமோ போல் இருந்தது. என் அப்பாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனக்கு நானே எழுதிப் போட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அழுதாள்.


கமலா அவள் கண்களைத் துடைத்தவாறு சீ..இதுக்கு போயா அழுவது. எங்க அப்பா ஏ.சி. அறையில் உட்கார்ந்துகொண்டு ஒரு நிறுவனத்திற்காக மட்டும்தான் உழைக்கிறார். ஆனால் உங்க அப்பா வெயிலில் காய்ந்து எல்லோருடைய பசியை போக்குவதற்காக உழைக்கிறார்.


கிராமத்தில் அவரைப்  போன்ற விவசாயிகள் சேற்றில் காலை வைத்தால்தானே நகரத்தில் இருக்கும் எங்களால் சோற்றில் கை வைக்க முடியும்.  அதனால்  எங்க அப்பாவை விட உங்க அப்பா மிகவும் உயர்ந்தவர்.  அவர் மட்டுமல்ல. அவருடைய மகளான நீ என்னை விட மிகவும் உயர்ந்தவள். இதெற்கெல்லாம் போய் நீ வருத்தப்படாதே. 


நாம வரும் பொங்கல் பண்டிகையைஉங்க ஊரில்  உங்க அப்பா வீட்டில் கொண்டாடி விவசாயியான அவருக்கு பெருமை சேர்ப்போம் என்று கூறியவாறு விமலாவை பாசத்துடன்  அனைத்துக் கொண்டாள்.


விமலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.


(ராஜஸ்ரீ என்ற இயற்பெயர் கொண் வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)