புது ஜோடி

Su.tha Arivalagan
Sep 26, 2026,03:51 PM IST

- எம்.எல்.பிரபா


ராகவிக்கும், ராஜனுக்கும் திருமணம் ஆகி சில நாட்கள் தான் ஆகிறது. மாலை நேரம் அவர்கள் இருவரும் தங்கள் வீட்டு தோட்டத்தில், சுற்றியுள்ள வேலியில் சாய்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு, தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை என்பதை நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் கிள்ளிப் பார்த்துக் கொண்டனர்.


ராகவிக்கு மலரும் நினைவுகள்.. ரெண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றது. இருவரும் ஐ. டி.அலுவலகத்தில் வேலை பார்த்தனர். முதலில் நண்பர்களாகத்தான் பழகினர்.பின்னர் இருவரின் கருத்தும் ஒற்றுபோனதால் காதலாக மாறியது. ராகவி பெரிய பணக்கார வீட்டுப் பெண். ராஜனோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். 


இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ராஜனும் ராகவியும் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர். ஒரு நாள் ராகவியின் தந்தை வேலையின் காரணமாக காரில் வெளியூர் சென்று கொண்டிருந்தார். டயர் பஞ்சர் ஆகி கார் திடீரென்று ரோட்டில் நின்று விட்டது. 




வெயிலில் வெகு நேரம் நின்றதால் மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்ற ராஜன் தன்னுடைய டூவீலரை நிறுத்திவிட்டு ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை திறந்து முகத்தில் தண்ணீர் தெளித்தான். பிறகு ஒரு ஆட்டோவை பிடித்து பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான்.அவர் உயிர் பிழைத்தார். 


செய்தியை அறிந்த ராகவி வேகமாக ஓடி வந்தாள். கண்ணை விழித்து பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. ராகவியை அழைத்து அவளுடைய  கையைப் பிடித்து ராஜன் கையில்  ஒப்படைத்தார்.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)