வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இதை வெளியிட்டார்.
ஷுப்மன் கில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியை சொந்த மண்ணில் வழிநடத்தவுள்ளார். ரவீந்திர ஜடேஜா அணியின் துணை கேப்டனாக இருப்பார். கால்விரல் முறிவில் இருந்து முழுமையாகக் குணமடையாததால், முக்கிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது, மான்செஸ்டர் மற்றும் ஓவல் போட்டிகளில் விளையாடவில்லை என்பது நினைவிருக்கலாம்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், மற்றும் என். ஜெகதீசன் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஆசிய கோப்பை இறுதிப் போட்டி முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு நடக்கிறது.
இரண்டாவது டெஸ்ட்:அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
பேட்ஸ்மேன்கள்: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல். ஆல்-ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதீஷ் ரெட்டி. விக்கெட் கீப்பர்கள்: துருவ் ஜூரல், என். ஜெகதீசன்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. சுழற்பந்து வீச்சாளர்கள்: குல்தீப் யாதவ்
ரிஷப் பந்த் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். பும்ரா-சிராஜ் வேகப்பந்து கூட்டணியை எதிர்த்து விண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.