அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
Jul 14, 2026,11:10 AM IST
சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேசன் சஞ்சயின் தந்தையான முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் திரைப்படம் சிக்மா. இந்தப் படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 24 அன்று உலகளவில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதைத் தொடர்ந்தே, அவரது மகன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதாம்.
ஜேசன் சஞ்சய் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சுந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிக்மா திரைப்படம் காமெடி, புதையல் வேட்டை மற்றும் கொள்ளை சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் (heist) திரைப்படமாகும்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகும் புதிய படத்தை லைக்கா ஜிகேஎம் தமிழ்க்குமரன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த மற்றும் நடிகர் சுந்தீப் கிஷன் ஆகியோர் ஜேசன் சஞ்சய்யின் இயக்கம், பொறுமை மற்றும் சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளனர். சஞ்சய் மிகவும் தெளிவான சிந்தனையோடும், முறையான திட்டமிடலோடும் படப்பிடிப்பை நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் சிக்காமல் தனது சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தனித்துவமான நபரின் கதையை இந்தப் படம் பேசுகிறது என்று ஜேசன் சஞ்சய் தனது படம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜனநாயகன் படமும், சிக்மாவும் ஒரே நேரத்தில் கிளாஷ் விடப் போவதாக பரபரப்புக் கிளம்பியது. ஆனால் தற்போது அப்பா படத்திற்காக மகன் படம் தள்ளிப் போயுள்ள தகவல் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.