தொண்டை கரகரப்பு.. தொண்டை கட்டு.. தொண்டை வலி.. இவற்றிற்கு பாட்டி வைத்தியம் என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 29, 2025,02:39 PM IST

ச.சித்ராதேவி


தற்போது நிலவி வரும் பனிப்பொழிவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் பலருக்கும் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி மற்றும் குரல் கரகரப்பு (தொண்டை கட்டு) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு ஆரம்ப நிலையிலேயே வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்த தகவல்கள் இதோ...


முதலில் தொண்டை வலி 


தொண்டை வலிக்கு மிகச்சிறந்த மற்றும் முதன்மையான மருத்துவம் இதுதான். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தால், தொண்டையிலுள்ள கிருமிகள் அழிந்து வீக்கம் குறையும். சிறு துண்டு இஞ்சியை வாயிலிட்டு மென்று அந்த உமிழ்நீரை விழுங்கி வர தொண்டை வலி சரியாகும். 

தேங்காய் பால்ல மாசிக்காய் உரைத்து ம் சாப்பிடலாம் தொண்டை வலி சரியாகும். உப்பு எலுமிச்சை சாறு கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்க தொண்டை வலி சரியாகும். நீரைக் கொதிக்க வைத்து வேப்ப பூவை போட்டு ஆவியை வாய் வழியாக உள்ளே இழுக்கவும் தொண்டை வலி சரியாகும்.


தொண்டை கரகரப்பு நீங்க...




திப்பிலி, ஏலரிசி, சுக்கு, மிளகு எல்லாம் சம அளவு எடுத்து பொடி செய்து தேவையான நேரத்தில் தேனில் கலந்து குடித்து வர சரியாகும். இளம் மாவிலை சாறில், தேன், பால், பசு நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் கரகரப்பு குணமாகும். தொண்டை கரகரப்புக்கும், சளிக்கும் மிளகு ஒரு அருமருந்து. ஒரு டம்ளர் பாலில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொதிக்க வைத்து குடிக்கவும். இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்வது தொண்டை புண்ணை ஆற்றும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து பருகுவது தொண்டை கரகரப்பை உடனடியாகக் குறைக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory properties) தொண்டைக்கு இதமளிக்கும்.


 தொண்டை கட்டு


தொண்டை கட்டு மற்றும் குரல் கரகரப்புக்கு 'அதிமதுரம்' சிறந்த பலனைத் தரும். சிறிது அதிமதுரத் துண்டை வாயில் போட்டு மென்று அந்தச் சாற்றை உட்கொள்ள தொண்டை கட்டு சரியாகும். அதேபோல், துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்து வருவதும் நல்ல பலன் தரும். சுக்கு, மல்லி (தனியா) மற்றும் மிளகு ஆகியவற்றைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, கருப்பட்டி சேர்த்து குடித்தால் தொண்டை கட்டு மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.


(ச.சித்ராதேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)