லிட்டில் இந்தியா வர்த்தக வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிப்பு அவசியம்.. சிங்கப்பூர் அமைச்சர் புதுச்சேரி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பாரம்பரிய வர்த்தகங்களை மேலும் உயிர்ப்புடன் மாற்ற இளம் தலைமுறையின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை என்று அந்த நாட்டு அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா, சிங்கப்பூரின் முக்கிய கலாச்சார மற்றும் வணிக மையங்களில் ஒன்று என்பதால், இந்த பகுதியின் பாரம்பரிய வியாபாரங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய புதிய தலைமுறை பங்களிப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் மிக முக்கியமான பகுதிகளில் லிட்டில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர். அதாவது தமிழர்கள் இங்கு அதிகம் உள்ளனர். மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள், வர்த்தக மையங்கள் அதிகம். தமிழர்களின் தைப்பூசம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும்.
லிட்டில் இந்தியாவின் முகத்தை மேலும் பொலிவாக்க வேண்டும் என்பதையே அமைச்சர் ஜனில் புதுச்சேரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டிஜிட்டல் மாற்றத்தின் தாக்கத்தில் பாரம்பரிய வர்த்தகங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. இதனை சமாளிக்க நவீன தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் விற்பனை தளங்கள் போன்றவற்றை இளம் தலைமுறை விரைவாகப் பயன்படுத்த முடியும் என்றார்.
லிட்டில் இந்தியாவில் வணிகம் செய்பவர்களுக்கும் சமுதாய அமைப்புகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். இளம் தலைமுறை கொண்டுவரும் புதுமை முயற்சிகள் இந்த பகுதியின் பொருளாதாரத்துக்கு புத்துனர்வு வழங்கும் என்றும் கூறினார்.
மேலும், லிட்டில் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரம், உணவு, கலை, கடைகள் போன்றவற்றை உலகளவில் அறிமுகப்படுத்த இளையர்கள் முக்கிய பங்கு வகிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் முயற்சிகளுக்கு இணையாக, இளம் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு லிட்டில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் முக்கியத் தூணாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
(அ.சீ.லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)