அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
சென்னை: மோடி ஒருமுறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், என்.டி.ஏ கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி.. பேராசை படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.
இயற்கைக்கு முரணான கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கும் அமமுகவின் தலைவர், நேற்று வரை துரோகி என்றும் உலகத்திலே பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட துரோக பட்டத்தை உலகமே கண்டிருக்காது என எடப்பாடியை பேசி இருக்கிறார்.
இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்காது என்று தமிழிசை கூறுவது அறியாமையால் மட்டுமே. திமுக கூட்டணி என்பது வலுவான கூட்டணி. சந்தர்ப்பவாதத்திலும் தோல்வி பயத்திலும் டிடிவி தினகரன் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் செல்லாது என்று தெரிவித்துள்ளார்.