சிந்தனைச் சிதறல்.. பிரசவ வலி பெண்களுக்கு.. பிரிவின் வலியோ ஆணுக்கும்!
- அ.தாமஸ்
பத்து மாதங்கள் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கும் பிரசவம் என்னும் பிரிவில் கூட அது வலிக்கத்தான் செய்கிறது மீண்டும் அக்குழந்தையைத் தன் கரங்களில் தாங்கி முத்தமிடும் வரை.
பிரசவ வலி வேண்டுமானால் பெண்ணுக்கு உரியதாக இருக்கலாம் ஆனால் பிரிவின் வலி பெண்ணுக்கு நிகராய் ஆணும் இருக்கவே செய்கிறது.
பிள்ளைகளின் நலனுக்காய் பொருளீட்ட நெடுந்தூரம் பயணிக்கும் தந்தை ஊரின் எல்லையில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஊரையும் , தன்னைப் பிரிய முடியாமல் கலங்கி நிற்கும் உறவுகளின் துயரையும் கண்டு இதயம் கனத்து கண்கள் கலங்கினாலும் தன் துயரை ஒரு துளியும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகத்துடனே அவர்களை மீண்டும் சந்திக்கும் நினைவோடு பிரியும் அந்த பிரிவுக்கு நிகரேது.
இந்த வலியை சந்திக்காத சிந்திக்காத மனிதர்களே இல்லை இருந்தும் சிறு புன்னகையுடன் கடந்து போவதற்கு தான் உலகின் உயரிய வலிமை தேவைப்படுகிறது.
அந்தப் பிரிவின் வலியை புன்னகையோடு சுமக்கப் பழகினால் வாழ்க்கை சுகமாகும் இல்லையேல் அதுவே பெரும் சுமையாகும்.
இன்றைய பிரிவை நினைத்து கலங்கி நிற்காமல் இப்பிரிவு தான் நாளைய நம் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை உணர்ந்து நேற்றைய நினைவையும்,நாளைய இணைவையும் நினைத்து மகிழ்வோடு பயணிப்போம். ஆம் இப்பிரிவு தான் நம் உணர்வையும், உறவையும் உறுதிப்படுத்தி உள்ள அன்பில் நிலைநிறுத்தும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)