சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்குத் தவறெனத் தோன்றுவது மற்றவருக்குச் சரியெனத் தோன்றுகிறது!
Apr 02, 2026,01:41 PM IST
- அ.தாமஸ்
இந்த உலகில் 'தவறு' என்று எந்த ஒன்றும் தனியாக இல்லை. ஒருவருக்குத் தவறெனத் தோன்றுவது மற்றவருக்குச் சரியெனத் தோன்றுகிறது. சில நேரங்களில் நமக்கே, நாம் சரி என்று நினைத்தது தவறாகத் தெரிகிறது; தவறு என்று செய்தது சரியாகத் தெரிகிறது. எனவே, செய்த தவறுகளை உணர்வோம், இனியாவது தவறுகள் செய்யாமல் இருப்போம்.
எந்த ஒன்று பிறரை உடல் அளவிலோ மனதளவிலோ காயப்படுத்துகிறதோ, அதுவே தவறு. எனவே, தவறுவதில் தவறில்லை; ஒரு விஷயத்தைத் தவறு என்று தெரிந்தும் அதை மீண்டும் செய்வதுதான் தவறு. அதே நேரத்தில், செய்த தவறை உணர்ந்து வருந்தும்போது, அந்தத் தவறு தன் தன்மையை இழந்துவிடுகிறது. எனவே, தவறியதை நினைத்துத் தளர வேண்டாம்.
மறப்பது மனித குணம். மறதிதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மிகச்சிறந்த வரம். எனவே, நல்லவற்றை நினைப்போம்; அல்லவற்றை முழுமையாய் மறப்போம்; மறந்ததை மீண்டும் நினைக்காமல் இருப்போம்; நாள்தோறும் மகிழ்வினில் திளைப்போம்.
தவறுகளை வெறுப்போம், தவறியவர்களை அல்ல! ஒருவர் செய்த தவறுக்காகத் தவறியவரை வெறுக்க ஆரம்பித்தால், இவ்வுலகில் உண்மையாய் நேசிக்க ஒரு உறவுகூட மிச்சமிருக்காது. ஆம், தவறு செய்யாத மனிதர் இல்லை; தவறே செய்யவில்லை எனில் அவர் மனிதரே இல்லை. எனவே, தவறுகளை மட்டுமே வெறுப்போம்; தவறியவர்களை முற்றாய் நேசிப்போம்—அவர்கள் மீண்டும் தவறாமல் இருப்பதற்கு நம் நேசமே துணையிருக்கும்.