மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!

Su.tha Arivalagan
Oct 14, 2025,01:40 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


நிவேதிதா அம்மையார்.. இந்தியர்களால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒரு பெருமாட்டி. இவரது இயற்பெயரான மார்க்ரெட் எலிசபெத் நோபல்.


தன் வாழ்வையே மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த இவருக்கு, அர்ப்பணம் என்று அர்த்தப்படும் 'நிவேதிதா' என்ற பெயரை இவருக்கு சுவாமி விவேகானந்தர்தான் கொடுத்தார்.  


மார்க்ரட் எலிசபெத் நோபலாக அயர்லாந்தில் பிறந்து (ocotober 28, 1867), இந்திய மண்ணில் நிவேதிதா அம்மையாராக மறைந்தார் (October 13, 1911).  இல்லை இல்லை, மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


44 ஆண்டுகள் வாழ்ந்த இவர் சமாதியில்,  'இவர் அனைத்தையும் இந்தியாவுக்கு அர்ப்பணித்தார்' என்னும் வாசகம் உள்ளது.


நிவேதிதா அம்மையார், பெண்கள் கல்வி, சுய நம்பிக்கை, சுதந்திரம், குறித்து சொன்னது தான் பாரதியாரின் "புதுமைப்பெண்" மற்றும் "பெண்ணே உயர்ந்தவள்" போன்ற கவிதைகளுக்கு வித்தாகின. பாரதியார் இவரை நிவேதித்தா அம்மையார் என்று அழைத்தார். 




இந்திய சுதந்திர சிந்தனையை வலியுறுத்திய முதல் வெளிநாட்டு பெண்களில் இவர் ஒருவர்.


இந்திய கலாச்சாரம், மதம், அறிவியல், கலை போன்றவற்றில் பெருமை கொள்ள வேண்டும், என இந்திய இளைஞர்களை ஊக்குவித்தார். சுவாமி விவேகானந்தரின் தேச சிந்தனையை மக்களிடையே பரப்பும் பாலமாக இருந்தார்.


அன்னை சாரதா தேவியுடன் பேசுவதற்காகவே பெங்காலி மொழியைக் கற்றுக் கொண்டார். பத்திரிகைகள் அரசியல் தலைவர்கள் போன்றவருடன் தொடர்பு கொண்டு, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டார். 


முதலில் கிறிஸ்தவ மதம், பிறகு புத்த மதம் என்று இருந்த இவர், கடைசியில் இந்து மதத்தை தழுவினார்.


இங்கிலாந்தின் சிறப்பு கல்வியாளர் என்ற பெயரைப் பெற்ற இவர், இந்திய பெண்களின் மேம்பாட்டிற்காக இந்தியாவில் பள்ளியை தொடங்கினார்.


பள்ளிப்படிப்பு போக, பெண்களுக்கு கைவினை தொழில் பயிற்சி, ஓவியம், துணி தைத்தல், மண் பொம்மை தயாரித்தல் போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். இதற்காக நிதி திரட்டவே எழுதினார் பல புத்தகங்கள். அவற்றுள் ஒன்றுதான் 'கிரேடில் டேல்ஸ் ஆப் இந்துயிசம்'.  குழந்தைகள் மனதில்,  இந்தியத்தின் ஆன்மீக மரபு மற்றும் புராண கதைகளின் அழகை விதைக்க எழுதியது தான் இந்நூல்.  இதில் பெரும்பாலும் இராமாயணம், மகாபாரதம், சிவன், விஷ்ணு, தேவி ஆகிய தெய்வங்களின் அருமையான சிறுகதைகள் இடம் பெறுகின்றன.


குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறு வயதிலேயே நல்ல விஷயங்களை பதிய வைப்பதற்கு இக்கதைகள் உறுதுணையாக இருக்கும்.  உதாரணத்திற்கு சில கதைகளை பார்ப்போமா?


கிரேடில் டைல்ஸ் ஆஃப் இந்துஸம் புத்தகத்திலிருந்து சில கதை சுருக்கங்கள்:


அன்னையின் கரம்:


ஒரு சிறுவன் தாயை இழந்து விட்டு, "எனக்கு மீண்டும் அம்மா? " கிடைக்குமா என்று கேட்டான்.  தெய்வம் அவனிடம், " ஒவ்வொரு பெண்ணின் உள்ளமும் ஒரு தாயின் கரம் கொண்டது " என்றது.  அதன்பின் அந்த சிறுவன் உலகை அன்பின் பார்வையில் காணத் தொடங்கினான்.  இந்தக் கதையின் மூலம்  ' அன்னை தெய்வத்தின் வடிவம்' என்பதனை உணர்த்துகிறார் அம்மையார்.


சத்தியத்தின் வழி:


ஒரு சிறுவன் தன் தவறை ஒப்புக் கொண்டு உண்மையை சொல்லும் துணிவை காட்டுகிறான். அவனிடம் குரு சொல்லுவது

 "உண்மையைப் பேசும் வாய்-- அது வேதம் பேசும் வாயாகும்".  இதன் மூலம் குழந்தைக்கு நேர்மை மற்றும் தைரியத்தை கற்பிக்கிறார் நிவேதித்தா.


சூரியனின் மகள்:


ஒரு முறை சூரியனின் மகள் பூமிக்கு வந்து, அன்பும் வெளிச்சமும் வழங்கினாள்.   அவள் சென்ற இடமெல்லாம் தாவரங்கள் மலர்ந்தன, மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் சிலர் அவள் ஒளியை பொறுக்கவில்லை. அவர்கள் அவளை மறைத்தனர். அப்போது பூமி இருளில் மூழ்கியது. பின்னர் அனைவரும் உணர்ந்தனர், 'ஒளியை அடக்கும் முயற்சி தாமே இருளாகும்' என்று.

 இந்த கதை, சத்தியத்தையும் நல்லதையும் தடுக்க முடியாது என்ற கருத்தை எடுத்து உரைக்கிறது. எப்படிப்பட்ட உதாரணம் பாருங்கள் !


பலராமனின் கருணை: 


ஒரு சிறுவன் தவறாக ஒரு சிறிய பறவையை காயப்படுத்தினான். அவன் அழுதபடி விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனிடம் சொன்னார் "மன்னிப்பு கேட்கும் இதயம் உன்னை மீண்டும் தூய்மையாக்கும்" என்று.  அதன் பின் அந்த பறவை மீண்டும் பறந்தது.  கருணை, மன்னிப்பு, மனம் சுத்தம் என்ற மதிப்புகளை கற்றுக் கொடுக்க எவ்வளவு அழகான கதையை எழுதி உள்ளார் !


சிறுவன் கண்ணனின் அன்பு:


மண் சாப்பிட்ட கண்ணனை யசோதா வாய் திறக்க சொன்னாள். அவளுக்கு புவி, சூரியன், விண்மீன் அனைத்தும் தெரிந்தது. அவள் நடுங்கி "இவன் தெய்வமா?" என வினவினாள். கண்ணன் சிரித்து, தன் சிறு கைகளை அவள் முகத்தில் வைத்து, "நான் உன் மகன்தான் அம்மா" என்று சொன்னான்.  இதன் மூலம் நிவேதிதா அன்பில் தெய்வம் மறைந்து இருப்பதை விளக்குகிறார்.


சந்திரனின் வாக்குறுதி:


ஒரு சிறுமி இரவில் வானத்தைப் பார்த்து சந்திரனிடம் "நீ தினமும் என்னை வரவேற்கிறாய், நானும் உன்னை நினைப்பேன்" என்று கூறினாள்.  அதற்கு சந்திரன் "நீ நம்பிக்கையுடன் வாழும் வரை நான் உன்னை ஒளியால் தொடுவேன்" என்றது.  இக்கதையின் மூலம்,  நம்பிக்கை, நடப்பு, நிலைத்த உறவு ஆகியவற்றின் அழகை எடுத்து உரைக்கிறார் அம்மையார்.


பெண்களுக்கான கதைகளில்;


பார்வதி தேவி பரமேஸ்வரனை அடைய தவமிருந்த கதை, பொறுமையையும், நம்பிக்கையையும், உறுதியான மனம் கடவுளையும் கவரும் வல்லமை கொண்டது என்பதனையும் விளக்குகிறார்.


துர்க்கை தேவியின் வீரமிகு தோற்றம், பெண் மென்மையானவள் என்றாலும், அவளுள் மறைந்திருக்கும் வீரமும் ஆற்றலும் உலகைக் காக்கும் சக்தியாகும், என்று உரைக்கிறார்.


சீதையின் அன்பும் தியாகமும்’ என்ற கதை மூலம்,  'உண்மையும் பண்பும் பெண்களின் உண்மையான ஆபரணங்கள்' என்று சொல்கிறார்.


சத்தியவானை எமனிடம் இருந்து வாதிட்டு மீட்ட சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை  'பெண் போராட வல்லவள்' என்று கோடிட்டு காட்டுகிறார்.


‘பெண்கள் பக்தியால் உலகையே மாற்றும் சக்தி உடையவர்கள்’ என்பதனை, மீராபாய் பக்தியின் மூலம் கிருஷ்ணனை அடைந்தாள், என்ற கதையின் மூலம் உணர்ந்துகிறார்.


இவ்வாறாக கிரேடில் டேல்சில்  மொத்தம் 23 கதைகள் உள்ளன. வாங்கிப் படிப்போமே! நம் வாழ்க்கை சிறக்க.  வாங்கித் தருவோமே! 

மற்றோருக்கு, அவர் வாழ்க்கையும் சிறக்க.


இந்திய சமூக வாழ்வு, குடும்பம், மதம், நாகரிகம் ஆகியவற்றின் ஆழமான பார்வையை 'தி வெப் ஆப் இந்தியன் லைப்' என்ற புத்தகத்தின் மூலம் எழுதியுள்ளார். 


தாய் காளியின் தத்துவம், ஆற்றல், மற்றும் இந்திய பெண்களின் சக்தி போன்றவற்றை 'காளி தி மதர்' என்ற புத்தகத்தின் மூலம் கொடுத்துள்ளார்.


சுவாமி விவேகானந்தரின் ஆளுமை, உந்துதல், வாழ்க்கை நோக்கம் ஆகியவற்றை அழகாக சித்தரித்துள்ளார் 'தி மாஸ்டர் ஆஸ் ஐ சா ஹிம்' என்ற புத்தகத்தில்.


இந்திய மதங்களின் அன்பும், மரணமும் பற்றிய தத்துவ நோக்கத்தை ' அன் இந்தியன்  ஸ்டடி ஆப் லவ் அண்ட் டெத்' என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.


இந்திய வரலாற்றில் பெண்கள், மதம், கல்வி ஆகியவற்றை ஆராயும் நூலாக அமைந்துள்ளது 'தி புட்பாலஸ் ஆப் இந்தியன் ஹிஸ்டரி' என்று இவர் எழுதிய புத்தகம்.


இந்தியாவில் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை கோர்த்து வழங்கி உள்ளார் "ஸ்டடீஸ் ப்ரம் அன் ஈஸ்டர்ன் ஹோம்" என்ற புத்தகத்தில்.


பல தலைப்புகளில் இவர் எழுதியுள்ள கட்டுரைகளும் ஒரு புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


இப்புத்தகங்களை வாங்கி படிப்போம். நம் இந்தியாவை நமதாக்கிக் கொள்வோம். இதுவே தன் வாழ்வையே இந்திய மண்ணிற்காக அர்ப்பணித்த நிவேதிதா அம்மையாருக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும்.


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)