அஜித்குமார் மரண விவகாரம்: சிவகங்கை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார். இவருக்கு வயது 28. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், விசாரணைக்காக போலிசாரால் அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தார்.
அஜித்குமார் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் பலியாகியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்களாக கூறப்பட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த 6 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த 5 போலீசார் மீதும் தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அஜித்குமார் மரண வழக்கில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.