சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் 'பராசக்தி'. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், தான் உருவாக்கிய கதையை உரிய அனுமதியின்றி படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளதாகவும், இது அறிவுசார் சொத்துரிமையை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை அறிய விரிவான விசாரணை அவசியம் எனத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, 'பராசக்தி' படக்குழுவினர் மற்றும் மனுதாரர் என அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை குறித்த முழுமையான அறிக்கையை வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் கதை திருட்டு புகார்கள் எழுவது வழக்கம். இருப்பினும், 'பராசக்தி' போன்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள படத்திற்கு, படத்தின் டைட்டில் முதல் கதை வரை சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைக்டரர் சுதா கொங்கரா இயக்கி உள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த சமயத்தில் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கையைப் பொறுத்தே, படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் வெளியீடு குறித்த தெளிவான முடிவு தெரிய வரும்.