சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
ஈரோடு : ஈரோடு சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் நேற்று முதல் மூன்று தேங்காய்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆண்டவர் உத்தரவுபெட்டியில் என்ன பொருள் வைக்கப்படுகிறதோ அது தொடர்பாக நிகழ்வுகள் நடப்பது பல காலமாக நடந்து வருகிறது. அதன் படி பார்த்தால், விரைவில் தேங்காய் தொடர்பான மிக முக்கியமான விஷயம் ஒன்று நாட்டில் நடக்க போகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆண்டவர் உத்தரவுப்பெட்டி :
ஈரோடு சிவன்மலையில் உள்ள முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும். வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக, இங்கு ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் என்று கண்ணாடி கதவு போடப்பட்ட ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் யாராவது ஒருவரின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, என்ன பொருள் வைக்க சொல்கிறாரோ, அந்த பொருளை இந்த பெட்டிக்குள் வைத்து பூஜை செய்வார்கள். அப்படி வைக்கப்படும் பொருள் சார்ந்த ஏதாவது ஒரு நிகழ்வு நாட்டில் நடைபெறும். இதை முன்கூட்டியே முருகப் பெருமான் உணர்த்துவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். மீண்டும் வேறு ஒரு பக்தரின் கனவில் முருகன் தோன்றி, வேறு ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபடும் படி உத்தரவு வரும் வரை, ஏற்கனவே வைக்கப்பட்ட பொருளை வைத்து வழிபடுவார்கள்.
முந்தை கால நிகழ்வுகள் :
இதற்கு முன் தண்ணீர் வைத்து வழிபட்ட போது சுனாமி வந்தது, துப்பாக்கி வைத்து வழிபட்ட போது கார்கில் போர் வந்தது, மஞ்சள் வைத்து வழிபடும் போது மஞ்சள் விலை உயர்ந்து நல்ல விளைச்சல் ஏற்பட்டது என்பது போன்ற பல நிகழ்வுகள் முந்தைய காலங்களில் நடந்துள்ளால் சிவன்மலை ஆண்டவர் உத்தரப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று முதல் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மூன்று தேங்காய்கள் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்? தேங்காய் வைத்து வழிபடுவதால் என்ன நடக்கும்? என்ற ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.
ஆன்மீக காரணம் :
இந்துக்களின் வழிபாட்டில் தேங்காய் மிக முக்கியமான பொருளாக கருதப்டுகிறது. மிக முக்கியமான மங்கள பொருட்களில் தேங்காயும் ஒன்றாக கருதப்படுகிறது. இது பரிபூரணத்தின் அடையாளமாகவும், தெய்வீக இருப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதே போல் தேங்காயில் உள்ள மூன்று கண்ணகள் சிவபெருமானின் மூன்று கண்களைப் போல் ஞானத்தையும், இச்சா-ஞான-கிரியா சக்திகளையும் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதனால் தேங்காய் வைத்து வழிபடப்படுவதால் மங்கள காரியங்கள் பலவும் நடைபெறலாம் என்பதை உணர்த்துவதாக இருக்கலாம்.
சமூக காரணங்கள் :
சமூகத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுடன் தொடர்புப்படுத்தி பார்த்தால், தென்னை விவசாயம் செழிக்கவும், தேங்காய் விவசாயிகள் நல்ல லாபம் பெறுவதற்கான காலம் வர உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்நாத் தலைமையிலான குழு சமீபத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், இது போல் கள்ளச்சாராய மரணங்களை தடுக்கவும், மதுவால் சமூகம் சீரழிவதை தடுக்கவும் கள் இறக்குமதிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், இதே யோசனையை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளார். இதனால் தென்னை விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறி இருந்தார்.
ஏற்கனவே கள் இறக்குமதிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வரும் நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான கோவில் ஒன்றில் தேங்காய் வைத்து பூஜை செய்யப்படுவதால் இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடலாம் என்ற நம்பிக்கை தென்னை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.