விழித்துக் கொள்!

Su.tha Arivalagan
Oct 12, 2026,12:08 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


குடி மாந்தனே

பெருங்குடில் 

மாந்தனே

நாளை முதல்

குடிக்க மாட்டேன்

சத்தியம் என்றாயே? 


துன்பம் போக்கும் மூலநாயகன் கூறிய

இன்று போய்   

நாளை வா

எனும் இதமான 

சொல்லை

உனக்கு 

பதமாக்கிக் கொண்டாயோ? 


நாளை நாளையென

நாளைத் 

தள்ளிப்போடும்

உன் சாமர்த்தியம் 

தான் என்னவோ? 




தள்ளப்படும் நாள்

ஒவ்வொன்றும்

உயிரை அள்ளிப் போகும்  நாள்  என்பதை

மறந்தாயே? 


அள்ளி அணைத்து 

அகமகிழ மழலைகள் 

அன்புக்கு ஏங்க

மனையாள் காலில் கண்ணீர் பெருகி

நாளும்  போராட

மதுவை அணைத்து 

மயங்கி மதி

தள்ளாட

நேமியை   விற்று எளியோர்  வறியோர் 


வாழ்வை மதுவுக்கு 

அடிமையாக்கி

தன்னலவாளர்கள்

மகிழ கையூட்டு 

நடுவன் அரசு

தாலிக்கு 

தங்கம் தந்து

பின் தாலி கட்டியவனை  இழந்து   


குடிமாந்தனை

உருவாக்கும்

நிலை மாறிட

உன்னை நீ உணர

உன் வாழ்வை நீ

வாழ்ந்திட  

உடலை விட்டு 

உயிர் பிரியும் 

வாழ்நாள் 

சொற்பத்துக்குள்


வழி மரபுகளுக்கும்

உனது அறியாமை

தொடராது

நல்லறிவு புகட்டிட

நலத்துடன் வாழ்ந்திட

நதி கொண்ட வழியாய்

மதி கொண்டு உழைத்திட


விழித்தெழு

மானிடா

நற்பேறு உனதாக

நன்றியுடன் நாயும் வாலாட்டும்.