வழிகாட்டி
Oct 17, 2026,02:39 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி
வாழ்க்கை எனும் போக்கில்
நாமனைவரும்
போக்காளர்களே
பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடைபட்ட
வாழ்க்கையே
பட்டறிவாம் நமக்கு
வாழும் காலத்தில்
எதற்கு? எப்படி? வாழ்கிறோமென
எண்ணுவதே
அறிவின் சிறப்பு
இரவு பகல் போல
இன்பமும் துன்பமும்
மாறி வரும்
இயற்கையில்
துன்பத்தைக் களைந்தெடுக்க
தீஞ்செயல்களை துணை கொண்டால்...
நாளும் வளரும் செடி கொடிகள் பரவி
வளர்வதைப் போல
உடலில் நச்சுகள் பரவி
உன்னை யழித்து
குடும்பத்தையும் ஏதிலியாக்கும்
எரிப்பது நீ
எரிவது உன் குடும்பம்
தெரிந்தும் உணர்ச்சிக்கு அடிமையாவதேனோ?
முள் மரமாய் வாழ்வதைவிட
கனி கொடுக்கும் மரமாக வாழ்ந்திட
"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு
அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு"
என்பதை கனவிலும்
மறவாது
பிறங்கடைக்கும்
வழித்துணையாய்
விழித்திடு
பிழைத்திடு
சவாலாக ஏற்று
வாழ்ந்திடு
வழிகாட்டியாய்!