அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

Su.tha Arivalagan
Nov 06, 2025,04:48 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ! 

ஜக்கம்மா நல்லாசி  புரிஞ்சிட்டா 

நாளைய பொழுதும் விடிஞ்சிட்டா 

மகமாயி செல்வத்த  வாரி வழங்கிடுவா 


கல்லும் முத்தாகுமப்பா !

கலகலன்னு சிரிப்புச் சத்தம் ஒ வீட்ல கேக்குதப்பா 

 நீ கருணை ஜீவனப்பா 

கடகடன்னு ஒ அந்தஸ்து ஏறுமப்பா 




சுக்கிரன் தான் வீட்ல புகுந்திட்டாம்மா !

சுப நிகழ்சிகள் அடுத்தடுத்து நடக்குமம்மா 

கீரைய கில்லி போட்டு கூட்டு வச்சிருப்ப  

இனி, முந்திரிய அள்ளிப் போட்டு ஆயிரம் பேருக்கு குடுப்ப


ரோஜாப்பூ போல இருக்கும் ஒ  முகத்த பாரு  !

தோட்டத்தில ஊசி தட்டான் திரியுது பாரு 

வீட்டுக்குள்ள பச்ச வெட்டிக்கிளி பறக்குது பாரு 

ஒ  இஷ்டமெல்லாம் விரைவா நிறைவேறும் பாரு 


வாழ்க்கை ஓட்டத்தில நீ நின்னியே தேவதையா !

மூக்கை சிமிட்டி சிரிச்சியே மரக் காயா 

ஒ  இல்லத்த நல்லதாயி காப்பா 

அவ உள்ளத்திலதான் குடியிருப்பா 


காத்திருந்த நாட்களெல்லாம் கப்பலேறி போச்சு !

கரை ஏறி நீயும் வந்திட்ட ஆச்சு 

தாமிர பரணி போல துள்ளி ஓடிடுவ 

தங்க மீனப் போல நீயும் மின்னிடுவ 


சாத்தியமான்னு கேக்காத தாயி

அதிசயம் நடக்குது, நல்லசொல்ல நம்பு நீ  

அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் அத்தனையும் சிருஷ்டம் !

தானா பெருகுது ஒ குடும்ப விருக்ஷம் !


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)