விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!

Su.tha Arivalagan
Nov 18, 2025,03:42 PM IST

- அ.சீ. லாவண்யா


சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்படும் நிலையில் அடுத்த சில நாட்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வின் விளைவாக தமிழகத்தின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மழை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


ரபி சீசன் தொடங்கி உள்ள நிலையில், ஈரப்பதம் குறைந்த நிலங்களில் இந்த மழை விவசாயிகளுக்கு பெரிதும் உதவக்கூடும் என்று வேளாண்மை துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயிர் வளர்ச்சிக்கு தேவையான மண்ணீர்ப்பாசனம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அடுத்த மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


நெல் ஆதரவு விலை: கொள்முதல் மையங்கள் அதிகரிப்பு 




தமிழகத்தில் நெல் அறுவடை வேகம் அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகள் சுலபமாக தங்கள் நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) விற்கும் வகையில் அரசு கொள்முதல் மையங்கள் (DPC) எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.


இந்த பருவத்தில் அதிக அளவில் நெல் வருகை இருக்கும் என்பதால், புதிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே இயங்கிவரும் DPC-களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரிசையில் காத்திருக்கும் விவசாயிகளின் சிரமம் குறைக்கப்படும் எ ம் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.


மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதரவு விலை-ஒருதர நெலுக்கு ₹2,300 மற்றும் இரண்டாம் தர நெலுக்கு ₹2,320-என்பதைப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துல்லியமாக பின்பற்ற அனைத்து மையங்களுக்கும் தனித்தனியாக அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.


விவசாயிகள் தங்கள் நெலை அரசிடம் நேரடியாக ஒப்படைக்கும் போது தேவையான ஆவணங்கள் மற்றும் தரச் சான்றுகள் உடனே சரிபார்க்கப்படும்; பணபரிமாற்றம் தாமதமின்றி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


உரத்தொகை விநியோகம்: மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு 


ரபி சீசன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், யூரியா, DAP உள்ளிட்ட முக்கிய உரங்களுக்கு மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு அனுப்பத் தொடங்கியுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் வேதியியல் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சில மாநிலங்களில் ஏற்பட்டிருந்த தற்காலிக உரக் குறைபாட்டை சரிசெய்ய, கூடுதல் ரெயில் ரேக்குகள் மூலம் அவசரகால போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை காரணமாக, நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட ரபி பயிர்களுக்கு தேவையான உரங்களை விவசாயிகள் சுலபமாக பெற முடியும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.


உர விலை உயர்வு ஏற்படாத வகையில் மானியம் தொடரும்; தரம் குறைந்த உரங்களை விற்பனை செய்யும் மையங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உரத்துறை எச்சரித்துள்ளது.


(அ.சீ. லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)