படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
டில்லி : பஞ்சாப் மற்றும் ஜம்மு- காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி வருகிறார். அவரது அறக்கட்டளை உணவு, தங்குமிடம் மற்றும் உடைகளை வழங்கி வருகிறது. இதற்காக சோனு சூட்டுக்கு பாலிவுட் நடிகர்கள் அலியா பட், கரீனா கபூர், விக்கி கௌஷல் போன்ற பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் உள்ள சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. குர்தாஸ்பூர், ஃபசில்கா, கபூர்தலா, தர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அம்ரித்சர் ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 61,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சார் தாம் யாத்திரை மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் யாத்திரை செப்டம்பர் 5 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கு நடிகர் சோனு சூட் மீண்டும் ஒருமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளார். பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் உதவி வருகிறார். சோனு சூட்டின் அறக்கட்டளை களத்தில் இறங்கி வேலை செய்கிறது. உணவு, தங்குமிடம், உடை மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. பல பாலிவுட் பிரபலங்கள் சோனு சூட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அலியா பட், கரீனா கபூர், விக்கி கௌஷல் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
சோனு சூட் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில், "பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். எங்கள் குழுவினர் உணவு, தங்குமிடம், உடை மற்றும் உதவிகளை வழங்குகிறார்கள். ஒன்றாக சேர்ந்து நாம் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பலாம்" என்று கூறினார்.
அலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இதயம் கஷ்டப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அன்பு, தைரியம் மற்றும் பிரார்த்தனைகளை அனுப்புகிறேன். உதவி செய்ய களத்தில் அயராது உழைக்கும் மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான ஆதரவு கிடைத்து அவர்கள் குணமடையவும், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பஞ்சாபிற்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
விக்கி கௌஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பஞ்சாப் மற்றும் வடக்கில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுளின் குழந்தைகள் கிராமங்களுக்குச் சென்று உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். என்னால் முடிந்த உதவியை செய்ய முயற்சிக்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீண்ட கால உதவி தேவைப்படும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பும் கொரோனா உள்ளிட்ட பல பேரிடர் காலங்களில் தனது சொந்த செலவில் சோனு சூட் பல உதவிகளை செய்துள்ளார். பல படங்களில் வில்லனாக கலக்கிய சோனு சூட், நிஜ வாழ்க்கையில் தான் ஹீரோ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.