அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
Dec 24, 2025,06:45 PM IST
சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான முதற்கட்டத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சென்னையில் நேற்று நடைபெற்றது.மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் பாஜக தரப்பிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுகவும் பாஜகவும், வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கைகோர்த்துள்ளன. இதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்சி பெரும்பான்மையை பெற வேண்டும் என்றால், அந்த கட்சி மட்டும் தனியாக மொத்தமுள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் பெற வேண்டும். அதாவது 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளை விட கூடுதலாக பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே கூட்டணிகளின் ஆதரவு இல்லாமல் 5 ஆண்டுகள் ஆட்சி நட்த முடியும்.
இதை கணக்கில் வைத்து தான் 160 இடங்கள் என அதிமுக பேச்சை துவங்கி உள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 74 தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து தரப்படும். இவற்றில் பாஜக.,விற்கு 23, பாமக.,விற்கு 23, அமமுக.,விற்கு 6 சீட்கள் ஓதுக்கப்பட உள்ளதாக ஒரு புறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போக மீதமுள்ள சீட்கள் தான் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். அப்படி பார்த்தால் தேமுதிக.,விற்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதி ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாகத் தொடங்கியது.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினருடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.