தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டம்
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் தென் கோடியான கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில், தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத்தை மையப்படுத்தித் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜனவரி மாத இறுதியில் அவர் தமிழகம் வர திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டம் வெறும் பாஜகவின் கூட்டமாக மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வலிமையைக் காட்டும் மேடையாகவும் அமையும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதோடு, தேர்தல் வாக்குறுதிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவிற்கு, பிரதமரின் இந்த வருகை மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். இந்தப் பயணத்தின் போது சில முக்கியத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் தமிழக வருகைக்கு முன் என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.