முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?
சென்னை : காங்கிரஸ் எப்படியாவது தங்கள் பக்கம் வந்து விடும் என நம்பி, காத்திருந்த தவெக.,விற்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதால் தவெக தலைவர் விஜய் செம அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதில் கடந்த சில வாரங்களாக தீவிர மோதல் போக்கு நிலவி வந்தது. அதோடு தொகுதி பங்கீடும் முடிவுக்கு வராமல் இழுபறியாகவே இருந்து வந்தது. திமுக.,விற்கு எதிரான குரல்கள் காங்கிரசில் அதிகரிக்க துவங்கியதால், தவெக பக்கம் செல்லலாமா என காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது. 25 சீட்டுக்கு ஒத்துக் கொள்ள முடியாது என காங்கிரசும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க முடியாது, அதிகாரத்தில் பங்கும் தர முடியாது என்பதில் திமுக.,வும் பிடிவாதமாக இருந்து வந்தன. இதனால் தவெக உடன் காங்கிரஸ் ரகசியமாக கூட்டணி பேச்சுக்கள் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.
காங்கிரஸ் தான் திமுக கூட்டணியின் பலமே. அவர்கள் வெளியேறி விட்டால் திமுக.,வின் தோல்வி உறுதியாகி விடும். காங்கிரசின் ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அள்ளி எளிதில் வெற்றி பெற்று விடலாம். 150 ஆண்டுகள் பழமையான கட்சியே தங்கள் பக்கம் வந்து விட்டால் அதை விட வேறு என்ன வேண்டும் என காங்கிரசை அதிகமாக நம்பிக் கொண்டிருந்தது தவெக. அந்த நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் வகையில் காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி பேசி வந்தார். மற்றொரு புறம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களான வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் ஆகியோரும் தவெக பக்கம் செல்வதில் என்ன தவறு என்ற ரீதியில் பேசி வந்தார்கள்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைய போகிறது, இறுதி கட்டத்தை எட்டி விட்டது என மீடியாக்கள் சிலவும் கூறி வந்ததால் தவெக மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தது. இதனால் தான் தான் நேற்று நடைபெற்ற தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திலும் கூட திமுக, அதிமுக.,வை கடுமையாக தாக்கி பேசினார் விஜய். ஆனால் எதிர்பாராத வகையில் 28 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என திமுக தலைமையுடன் டீல் பேசி முடித்து விட்டது காங்கிரஸ். இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. இதனால் விஜய் செம அப்செட்டில் இருக்கிறாராம். அடுத்து என்ன செய்வது என தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி குறித்த முடிவை மறு பரிசீலனை செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். காங்கிரசை நம்பி, நம்முடைய நிலை இப்படி ஆகி விட்டதே, இவர்களை நம்பி அதிமுக.,வையும் பகைத்து கொண்டோமே என பலவிதமான குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.
இப்போது விஜய் முன்பு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது. அல்லது என்டிஏ கூட்டணியில் சென்று சேருவது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது, தேர்தல் அரசியலுக்கு புதியவரான விஜய்க்கு மிகப் பெரிய ரிஸ்காக அமைந்து விடும். திமுக தனது அரசியல் எதிரி என விஜய் ஏற்கனவே சொல்லி விட்டார். அதோடு திமுக கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு விட்டது. இப்போதும் மீதம் இருப்பது என்டிஏ கூட்டணி தான்.
அவர்களோடு சேர்ந்து போட்டியிட்டால் தமிழக சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பை விஜய் பெற முடியும். ஆனால் செங்கோட்டையன் போன்ற அதிமுக.,விற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தவெக.,வில் இருப்பவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிப்பார்களா என்பது சந்தேகம் தான். இதனால் விஜய் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.