ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

Su.tha Arivalagan
May 29, 2026,06:11 PM IST

டெல்லி: இந்தியாவில் நடப்பு ஆண்டில் வானிலையில் பெரும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


வரும் ஜூன் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட மிக அதிகமாக இருக்கும் என்றும், அதே வேளையில் நாட்டின் வாழ்வாதாரமான தென்மேற்கு பருவமழைக்கால மழைப்பொழிவு இயல்பை விட குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் இயல்பான கோடை நாட்களை விட கூடுதலான நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படலாம்.  




குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஹரியானா, பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயல்பை விட அதிகமான நாட்களுக்குக் கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரங்களுக்கும் மிக முக்கிய அங்கமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (South-West Monsoon) நடப்பு ஆண்டில் இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த பருவமழை காலத்தில், சராசரி மழைப்பொழிவில் 90 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


இருப்பினும், வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் இந்த பருவமழைக்கால மழைப்பொழிவு பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


குறைவான மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக விவசாயத் தொழில், பயிர் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்படலாம். முக்கிய நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புள்ளது.


வெப்பத்தின் கொடுமையால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாடு அதிகரித்து, மின்சாரத்திற்கான தேவை உச்சத்தை தொடும்.


இந்த அசாதாரண வானிலை சூழலையும், கடுமையான வெப்ப அலையையும் எதிர்கொள்ள ஏதுவாக, அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களும் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களும் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.